1.3 நிகழ்த்துக் கலையை அணுகும் ஐந்து வழித்தடங்கள்
ஒரு நிகழ்த்துக் கலையை அணுகும்போது நாம் முதலில் எதிர்கொள்வது அதன் நிதலாக இருக்கலாம்; ஆனால், நிகழ்த்துதல் மட்டுமே அந்த முழுக் கலை அல்ல. பார்வையாளர்களுக்கு முன் தோன்றுவது ஒரு பெரிய அறிவுத் தொகுதியுடன் இணைந்துள்ளது: அதை கற்றுக்கொண்டு பேணி வந்த மக்கள், அதன் வெளிப்பாட்டிற்கு உதவும் கருவிகள் மற்றும் பொருட்கள், அதற்கு நோக்கத்தை வழங்கும் நிகழ்வுகள், அதற்குப் பொருள் வழங்கும் இடங்கள் ஆகிய அனைத்துடனும் அது தொடர்புடையது. எனவே கண்ணுக்குத் தெரியும் நிகழ்வை மட்டும் பதிவு செய்தால், அந்த மரபின் பெரும்பகுதி ஆவணப்படுத்தப்படாமல் போகலாம்.
நுட்பமான பண்பாட்டு மரபைப் பற்றிய யுனெஸ்கோ ஒப்பந்தத்தின் விளக்கம், ஒரு நிகழ்த்துக் கலையை ஒரு தனிப் பொருள், உரை அல்லது பதிவாக மட்டும் கருதுவதைத் தாண்டிச் செல்ல நம்மை ஊக்குவிக்கிறது. இந்த உறவுசார் புரிதலை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்நாட்டின் விளிம்புநிலைப்படுத்தப்பட்ட நிகழ்த்துக்கலை மரபுகளை ஆய்வு செய்து ஆவணப்படுத்துவதற்காக CoDIN (Council for Diversity and Innovation) மற்றும் AMC (Alternative Media Centre) ஆகியவை ஒன்றோடொன்று தொடர்புடைய ஐந்து ஆவணப்படுத்தல் வகைகளை உருவாக்கின: கலைவடிவம், கலைஞர், நிகழ்த்துதல், கருவி மற்றும் இடம். ஒரு களப்பணியாளர் ஒரு மரபுக்குள் நுழைந்து, அதைப் பற்றி கற்று, ஆவணப்படுத்துவதற்கான ஐந்து வழித்தடங்களாக இந்தக் கருவித்தொகுப்பு அவற்றைப் பயன்படுத்துகிறது.
இந்த வழித்தடங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத தனித்தனி வகைகளோ, எப்போதும் ஒரே வரிசையில் பின்பற்ற வேண்டிய கட்டங்களோ அல்ல. ஒரு கலைஞருடனான உரையாடல் ஒரு கலைவடிவத்தின் வரலாற்றுக்கு நம்மை அழைத்துச் செல்லலாம். ஒரு நிகழ்த்துதல் ஒரு கருவியின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தலாம். ஒரு கருவி அதை உருவாக்கியவர், வாசிப்பவர் அல்லது அது தோன்றிய இடத்துக்கு நம்மை அழைத்துச் செல்லலாம். பண்பாட்டு முக்கியத்துவம் கொண்ட ஓர் இடம், ஒரு நிகழ்த்துதல் ஏன் குறிப்பிட்ட நேரத்தில் அல்லது குறிப்பிட்ட முறையில் நடைபெறுகிறது என்பதை வெளிப்படுத்தலாம். ஒவ்வொரு வழித்தடமும் மற்ற வழித்தடங்களை நோக்கி அழைத்துச் செல்கிறது.
வழித்தடம் 1: கலைவடிவம்
கலைவடிவம் என்பது ஒரு மரபுக்கு அதன் அடையாளத்தையும் தொடர்ச்சியையும் வழங்கும் அறிவுத் தொகுதியாகும். அது எந்த ஒரு தனிக் கலைஞரையோ பதிவு செய்யப்பட்ட ஒரு நிகழ்த்துதலையோ விடப் பெரியது. சமூகத்தினரால் அங்கீகரிக்கப்படும் உள்ளூர் பெயர்கள், வரலாறுகள், தோற்றக் கதைகள், அழகியல் நெறிகள், கதைகள், பாடல்கள், அசைவுகள், நுட்பங்கள் மற்றும் பங்கேற்பு விதிகள் ஆகியவற்றை அது உள்ளடக்கலாம். பிராந்திய (வட்டாரம்/நிலப்பகுதி) வேறுபாடுகள், பல்வேறு மரபுவழிகள் மற்றும் ஒன்றுக்கொன்று மாறுபடும் விளக்கங்களும் அதற்குள் இருக்கலாம்.
கலைவடிவத்தை ஒரு வழித்தடமாக அணுகுவது என்பது, அந்த மரபைப் பின்பற்றுபவர்கள் தாமே அதை எவ்வாறு புரிந்துகொள்கிறார்கள், என்ன பெயரில் அழைக்கிறார்கள் என்பதைக் கேட்பதாகும். அது எவ்வாறு தோன்றியது? அதை நடைமுறைப்படுத்த ஒருவர் எந்த அறிவை கற்றுக்கொள்ள வேண்டும்? அது எப்போது, ஏன் நிகழ்த்தப்படுகிறது? ஒரு நிகழ்த்துதல் பொருத்தமானதாக, திறமையானதாக அல்லது பொருள் கொண்டதாக அமைய எது காரணம்? காலப்போக்கில் அந்தக் கலைவடிவம் எவ்வாறு மாறியுள்ளது? அதன் எந்த அம்சங்கள் தொடர்ந்து பேணப்பட வேண்டும் என்று அதை நடைமுறைப்படுத்துபவர்கள் கருதுகின்றனர்?
இந்தக் கேள்விகளுக்கு ஒரே ஒரு பதில் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரே இறுதியான வரலாற்றை உருவாக்குவது இங்கு நோக்கம் அல்ல; அந்தக் கலை எவ்வாறு நினைவுகூரப்படுகிறது, விளக்கப்படுகிறது, நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை வெளிப்படுத்தும் பல்வேறு விளக்கங்களை ஒன்றிணைப்பதே நோக்கம்.
வழித்தடம் 2: கலைஞர்
ஒரு நிகழ்த்துக் கலை, அதன் அறிவைக் கற்றுக்கொண்டு, நடைமுறைப்படுத்தி, விளக்கி, அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் மனிதர்களின் வழியாக வாழ்கிறது. எனவே கலைஞர் வழித்தடம் தனிநபர் மற்றும் கூட்டு அறிவுத் தாங்கியவர்களை மையமாகக் கொள்கிறது: நிகழ்த்துநர்கள், ஆசிரியர்கள், சடங்கு வல்லுநர்கள், இணைநிகழ்த்துநர்கள், உருவாக்குநர்கள், குழுத் தலைவர்கள் மற்றும் அந்த மரபைத் தொடர்ந்து வாழவைக்கும் பிறர்.
இந்த வழித்தடத்தின் வழியாகக் கற்றுக்கொள்வது வாழ்க்கை வரலாற்றுத் தகவல்களைச் சேகரிப்பதைவிட அதிகம். ஒரு கலைஞர் எவ்வாறு கற்றார், அவருடைய ஆசிரியர்களும், இணைந்து பணியாற்றியவர்களும் யார், இந்தப் பயிற்சிக்கு என்னவகையான ஒழுக்கம் அல்லது தயாரிப்பு தேவைப்படுகிறது, உடல், குரல், நினைவு மற்றும் தொடர்ச்சியான பயிற்சியின் வழியாக அறிவு எவ்வாறு சுமந்து செல்லப்படுகிறது என்பதைக் புரிந்துகொள்ள வேண்டும். வாழ்வாதாரம், சமூக அங்கீகாரம், மாறிவரும் வாய்ப்புகள், மேலும் அடுத்த தலைமுறைக்கு கற்றுக்கொடுக்க ஒரு கலைஞருக்கு உதவும் அல்லது தடையாக இருக்கும் சூழ்நிலைகளையும் அறிந்துகொள்ள வேண்டும்.
கலைஞர்கள் பெற்ற மரபை அப்படியே மீண்டும் உருவாக்குபவர்கள் மட்டுமல்ல. அவர்கள் அதை விளக்குகிறார்கள், புதிய சூழல்களுக்கு பதிலளிக்கிறார்கள், அதன் தொடர்ந்த வளர்ச்சிக்கும் பங்களிக்கிறார்கள். எனவே அவர்களை ஒரு பதிவில் தோன்றும் நிகழ்த்துநர்களாகவோ, தகவல் வழங்கும் நபர்களாகவோ மட்டும் அல்லாமல், அறிவுத் தாங்கியவர்களாக அணுக வேண்டும்.
வழித்தடம் 3: நிகழ்த்துதல்
நிகழ்த்துதல் என்பது ஒரு கலைவடிவத்தின் அறிவு வெளிப்படும் குறிப்பிட்ட நிகழ்வு. அது குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட நோக்கத்திற்காக, குறிப்பிட்ட நிகழ்த்துநர்கள், பங்கேற்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுடன் நடைபெறுகிறது. அது சடங்கு சார்ந்ததாகவோ, விழாக்கால நிகழ்வாகவோ, இல்லச் சூழலில் நடைபெறுவதாகவோ, பொதுநிகழ்வாகவோ, மேடை நிகழ்வுகலாகவோ, கற்பித்தலுக்கான நிகழ்வாகவோ அல்லது குறிப்பாக ஆவணப்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டதாகவோ இருக்கலாம்.
நிகழ்த்துதல் வழித்தடம், அந்த நிகழ்வின்போது என்ன நடைபெறுகிறது என்பதை நோக்கிக் கவனத்தைத் திருப்புகிறது: அதன் வரிசை, பங்குகள், இசை, பேச்சு, அசைவு, பரஸ்பரச் செயல்பாடு, தன்னிச்சை உருவாக்கம் மற்றும் பொருட்களின் பயன்பாடு போன்றவை. அதேவேளை, அந்த நிகழ்வு ஏன் நடைபெறுகிறது, அதை யார் ஏற்பாடு செய்தனர், யார் பங்கேற்கலாம், பார்வையாளர்கள் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறார்கள், நிகழ்த்துநர்களே எதை முக்கியமாகக் கருதுகிறார்கள் என்பதையும் இது கேட்கிறது.
இரண்டு நிகழ்த்துதல்கள் முற்றிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. நிகழ்வின் தன்மை, இடம், காலநீளம், கிடைக்கும் நிகழ்த்துநர்கள், பார்வையாளர்களின் பங்கேற்பு அல்லது திட்டமிட்ட கலைத் தேர்வு ஆகியவற்றால் வேறுபாடுகள் உருவாகலாம். ஒரு பதிவு அந்தக் கலையின் குறிப்பிட்ட சூழலில் நிகழ்ந்த ஒரு வெளிப்பாட்டையே பதிவு செய்கிறது; அதை அந்த மரபின் முழுமையான அல்லது நிரந்தர அதிகாரப்பூர்வமான பிரதிநிதித்துவமாகக் காட்டக்கூடாது.
வழித்தடம் 4: கருவி
கருவி வழித்தடம் இசைக்கருவிகளை மட்டுமல்லாமல், உடைகள், முகமூடிகள், மேடைப் பொருட்கள் (கருவிகள்), சடங்குப் பொருட்கள் (கருவிகள்) மற்றும் நிகழ்த்துதலில் பயன்படுத்தப்படும் பிற பொருட்களையும் உள்ளடக்குகிறது. இவற்றை உருவாக்கியவர்கள், வாசிப்பவர்கள் அல்லது பயன்படுத்துபவர்கள் மற்றும் அவற்றின் பண்பாட்டுச் சூழல்களிலிருந்து பிரிக்கப்பட்ட செயலற்ற பொருட்களாகக் கருதக்கூடாது. அவற்றை உருவாக்குதல், பராமரித்தல், கையாளுதல் மற்றும் பயன்படுத்துதல் குறித்த அறிவின் வழியாகவே அவற்றின் பொருள் வெளிப்படுகிறது.
இந்த வழித்தடம் உள்ளூர் பெயர்கள், மூலப்பொருட்கள், தயாரிப்பு முறைகள், கூறுகள், உருவாக்குநர்கள், உடைமையாளர்கள், வாசிப்பவர்கள் மற்றும் பயன்பாட்டு நுட்பங்களை ஆராய்கிறது. ஒலி, குறியீட்டுப் பொருள், பயன்பாட்டுக் கட்டுப்பாடுகள், பழுதுபார்த்தல், மாற்றுதல், மேலும் தேவையான மூலப்பொருட்கள் அல்லது சிறப்பு நுண்திறன் கொண்ட உருவாக்குநர்கள் கிடைப்பதில் ஏற்பட்ட மாற்றங்களையும் இது கவனிக்கிறது. சில பொருட்கள் புனிதமானவையாகவோ, கட்டுப்படுத்தப்பட்டவையாகவோ இருக்கலாம்; அவற்றை அளவிடுதல், புகைப்படம் எடுப்பது அல்லது பொதுவெளியில் காட்சிப்படுத்துவது பொருத்தமற்றதாக இருக்கலாம்.
உரையாடல், கவனித்தல், அடிப்படைப் புகைப்படம் மற்றும் அந்தப் பொருள் பயன்பாட்டில் இருக்கும் போது பதிவு செய்தல் ஆகியவற்றிலிருந்து ஆவணப்படுத்தலைத் தொடங்கலாம். விரிவான அளவீடு, சிறப்பு புகைப்படம் மற்றும் முப்பரிமாண (3D) மின்னாக்கம் ஆகியவை கூடுதல் வாய்ப்புகள்; அவை குறைந்தபட்சத் தேவைகள் அல்ல. பதிவு செய்யப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தின் நுட்பத்தைவிட, அந்தப் பொருளின் பண்பாட்டு உறவுகளே முக்கியமானவை.
வழித்தடம் 5: இடம்
இடம் என்பது ஒரு நிகழ்த்துதல் நடைபெறும் வெறும் புவியியல் குறியீட்டோ, அரங்கமோ அல்ல. நினைவுகள், தொடர்ச்சியான பயன்பாடு, சமூக உறவுகள் மற்றும் அணுகல் விதிகளால் உருவாக்கப்படும் ஒரு பண்பாட்டு இடமாகும். கோயில் வளாகங்கள், கிராம வீதிகள், முற்றங்கள், வீடுகள், வயல்கள், நீர்நிலைகள், காடுகள், மேடைகள் மற்றும் ஊர்வலப் பாதைகள் ஆகிய அனைத்தும் பொருள் கொண்ட நிகழ்த்துதல் இடங்களாக இருக்கலாம்.
அந்த இடம் என்ன பெயரால் அழைக்கப்படுகிறது, அதை யார் பராமரிக்கிறார்கள் அல்லது கட்டுப்படுத்துகிறார்கள், அது எப்போது பயன்படுத்தப்படுகிறது, யார் அங்கு நுழையலாம், நிகழ்த்துநர்களும் பார்வையாளர்களும் எவ்வாறு அமைக்கப்படுகிறார்கள் போன்றவற்றை இடம் வழித்தடம் கேட்கிறது. அசைவு, திசை அமைப்பு, எல்லைகள், ஒலியியல் தன்மைகள், பருவநிலைச் சூழல்கள் மற்றும் சடங்கு அல்லது சமூக வாழ்க்கையுடனான தொடர்புகளையும் இது கவனிக்கிறது. இடம்பெயர்வு, சுற்றுச்சூழல் மாற்றம், வளர்ச்சித் திட்டங்கள் அல்லது அணுகல் கட்டுப்பாடுகள் ஒரு மரபின் தொடர்ச்சியை எவ்வாறு பாதிக்கின்றன என்பதையும் இது ஆராய்கிறது.
சில இடங்களின் துல்லியமான அமைவிடத்தை வரைபடத்தில் குறிக்கவோ பொதுவெளியில் அடையாளப்படுத்தவோ கூடாது. எனவே ஒரு இடத்தை ஆவணப்படுத்தும்போது எதைப் புகைப்படம் எடுக்கலாம், எதை விவரிக்கலாம், எதற்குப் புவியியல் அமைவிடக் குறியீடு வழங்கலாம், எதைப் பகிரலாம் என்பதைக் குறித்து சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசிக்க வேண்டும்.
உறவுகளைப் பின்தொடருதல்
ஒரு நிகழ்த்துக் கலையை ஒரு பதிவு அல்லது சுருக்கமான விளக்கப் பதிவாகக் குறைத்துவிடாமல் புரிந்துகொள்ள இந்த ஐந்து வழித்தடங்களும் உதவுகின்றன. ஒரு கலைவடிவத்துடன் பல கலைஞர்களும் பல நிகழ்த்துதல் நிகழ்வுகளும் தொடர்புடையதாக இருக்கலாம். ஒரு நிகழ்த்துதல் பல கலைஞர்கள், கருவிகள் மற்றும் பொருட்களை பண்பாட்டுப் பொருள் கொண்ட ஓர் இடத்தில் ஒன்றிணைக்கலாம். ஒரு கருவி அதை வாசிப்பவர்கள், உருவாக்குநர்கள், மூலப்பொருட்கள், வரலாறுகள் மற்றும் இடங்களோடு தொடர்பை ஏற்படுத்தலாம். தனித்தனியாக உருவாக்கப்பட்ட பதிவு வெளிப்படுத்த முடியாத ஒன்றை ஒவ்வொரு உறவும் வெளிப்படுத்துகிறது.
ஒரு களப்பணியாளர் இந்த வழித்தடங்களில் எதிலிருந்தும் தொடங்கலாம். அதிலிருந்து உருவாகும் உறவுகளைப் பின்தொடர்வதே முக்கியமான பணி. இந்த ஐந்து வழித்தடங்களும் சேர்ந்து, ஒரு நிகழ்த்துக் கலையை மக்களால் தாங்கப்படும், நிகழ்வுகள் மற்றும் பொருட்களின் வழியாக வெளிப்படும், குறிப்பிட்ட இடத்தில் நிலைபெறும், தொடர்ந்து விளக்கப்பட்டு தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்லப்படும் வாழும் அறிவாக அணுக உதவுகின்றன.