2.2 அனுமதி பெறுதல்

கேமரா அல்லது ஒலிப்பதிவுக் கருவி இயக்கப்படுவதற்கு முன்பே ஆவணப்படுத்தல் தொடங்குகிறது. களப்பணிக் குழுவின் முதல் பொறுப்பு, கலைஞர் அல்ல கலை வல்லுநர்கள் திட்டத்தைப் புரிந்துகொள்ளவும், கேள்விகள் கேட்கவும், பங்கேற்பின் நிபந்தனைகளைப் பேசி முடிவெடுக்கவும், பங்கேற்க வேண்டுமா என்பதை சுதந்திரமாகத் தீர்மானிக்கவும் இயலும் ஒரு உறவை உருவாக்குவதாகும்.

தேவையான சூழலில், கலைஞர் நம்பிக்கை வைக்கும் ஒருவரின் மூலம் முதல் அணுகல் மேற்கொள்ளப்படலாம்; உதாரணமாக குடும்ப உறுப்பினர், சக கலைஞர், கலைக்குழுத் தலைவர், சமூக மூத்தவர் அல்லது உள்ளூர் அமைப்பு. நாம் நேர்காணல் எடுக்கப்போகும் நபரைத் தவிர்த்து அவர் சார்பாக மற்றொருவர் ஒப்புதல் அளித்தலை ஏற்கக்கூடாது. குறிப்பிட்ட நபரின் நேரடியான ஒப்புதலைப் பெருவது மிகவும் அவசியம். நேரடியாக உங்களை நேர்காணல் செய்யவிருக்கிறோம், புகைப்படங்கள் எடுக்கப்படும், காட்சிப் பதிவு செய்யப்படும் என்று விளக்கிக்கூறி அவரின் அனுமதியையும் விருப்பத்தையும் பெறுவது மிக முக்கியம்.

குழுவையும் திட்டத்தையும் அறிமுகப்படுத்துங்கள்.

முதல் சந்திப்பில், நமது குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் தம்மை அறிமுகப்படுத்தி தங்களது பணிகளை விளக்க வேண்டும். பங்கேற்பாளருக்கு பின்வருவனவற்றை தெளிவாகத் தெரிவிக்கப்பட வேண்டும்:

மெட்டாடேட்டா (metadata), தரவுச் சேர்த்தல் (ingestion), அல்லது பிரத்தியேகமற்ற உரிமம் (non-exclusive licence) போன்ற தொழில்நுட்பச் சொற்களைப் பயன்படுத்தப்பட வேண்டுமானால், அவை பொதுமொழியில் அவர்களுக்கு புரியும்படி விளக்கப்பட வேண்டும். பங்கேற்பாளர் புரிந்துகொள்ளும் மொழியிலும் வடிவிலும் விளக்குங்கள். ஒரு படிவத்தை வாசித்துக் காட்டுவது மட்டும் போதாது; அதன் பொருள் புரியவைக்கப்பட வேண்டும்.

உதாரணமாக, சுவடுகள் இசைவுப் படிவம் மூன்று முக்கியமான பங்கேற்பு வடிவங்களைச் சுட்டுகிறது: ஒரு கலையை நிகழ்த்துதல் அல்லது செயல்விளக்கம் அளித்தல்; ஒலி-ஒளி அல்லது புகைப்பட ஆவணப்படுத்தல்; சூழல்சார் அல்லது வாய்மொழித் தகவலைப் பகிர்தல் (இணைப்பு 2A). ஆவணப்படுத்தல் பணியோட்டம் இதை மேலும் விரிவுபடுத்தி, நேரடி நிகழ்த்துதல் பதிவு, செயல்விளக்கங்கள், சூழல்சார் நேர்காணல்கள், வாய்மொழி வரலாறுகள், கருவிகள், ஆடைகள், பொருட்கள் மற்றும் நிகழ்த்துதல் இடங்களின் புகைப்படப் பதிவுகள் ஆகியவற்றை உள்ளடக்குகிறது. பங்கேற்பாளர் சிலவற்றுக்கு ஒப்புக்கொண்டு மற்றவற்றை மறுக்கக்கூடியதால், இச்செயல்பாடுகள் ஒவ்வொன்றாக விளக்கப்பட வேண்டும்.

நேரம் மற்றும் எதிர்பார்ப்புகளைப் பேசித் தெளிவுபடுத்துங்கள்.

எவ்வளவு நேரம் தேவைப்படும் என்பதை குழு நேர்மையாக விளக்க வேண்டும். ஒரு கலைஞர் அல்லது அறிவுத் தாங்குபவருடன் நடத்தப்படும் குறிப்பிட்ட நோக்கமுள்ள உரையாடல், உரையாடலின் தன்மையைப் பொறுத்து சுமார் இரண்டு முதல் மூன்று மணி நேரம் நீடிக்கலாம். அதன் பின்னர் அந்தப் பதிவைச் செயலாக்குவதற்கு ஆவணப்படுத்தல் குழுவிற்கு கூடுதலாக சுமார் நான்கு முதல் ஆறு மணி நேரம் தேவைப்படலாம். இந்தச் செயலாக்க நேர மதிப்பீடு ஆவணப்படுத்தல் குழுவுக்கானது; பங்கேற்பாளர் ஒதுக்க வேண்டிய நேரமாக இதை முன்வைக்கக் கூடாது.

உங்கள் தொடர்பைத் தொடங்குவதற்கு முன், பின்வருவனவற்றில் ஒப்புதல் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்:

  • ஒவ்வொரு அமர்விற்கும் முன்மொழியப்பட்ட தேதிகள், இடங்கள் மற்றும் கால அளவு;
  • பணி ஒரே நாளிலா அல்லது பல நாட்களிலா நடைபெறும்;
  • வேறு யார் யார் இருக்க வேண்டும்;
  • ஓய்வு, உணவு, பயணம் மற்றும் முன்தயாரிப்பு தேவைகள்;
  • குடும்பம், கலைக்குழு அல்லது சமூக உறுப்பினர்களுடன் ஆலோசிக்க பங்கேற்பாளருக்கு நேரம் தேவையா;
  • ஒரு நிகழ்த்துதல் சடங்கு, பருவகால அல்லது சமூக அட்டவணைக்கு ஏற்ப நடைபெற வேண்டுமா.

பங்கேற்பாளரின் பொறுப்புகளுக்கும் உடல் வசதிக்கும் ஏற்ப ஆவணப்படுத்தல் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். நீண்ட நேர நேர்காணல்கள் அல்லது செயல்விளக்கங்களில் இடைவேளைகள் இருக்க வேண்டும். கருவிகள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன அல்லது களப்பணிக் குழு தொலைதூரம் பயணம் செய்துள்ளது என்பதற்காக பங்கேற்பாளரைத் தொடர்ந்து செயல்பட அழுத்தம் கொடுக்கக் கூடாது.

தகவலறிந்த மற்றும் தொடர்ச்சியான இசைவைப் பெறுங்கள்.

இசைவு என்பது தொடக்கத்தில் பெறப்படும் ஒரு கையொப்பம் மட்டுமல்ல; அது ஒரு உரையாடலும் தொடர்ச்சியான செயல்முறையும் ஆகும். கையொப்பமிடுவதற்கு முன், ஒப்பந்தத்தைப் படிக்கவோ கேட்கவோ, கேள்விகள் கேட்கவோ, விளக்கம் பெறவோ பங்கேற்பாளருக்கு போதிய நேரம் வழங்கப்பட வேண்டும். முன்மொழியப்பட்ட நிபந்தனைகளை பங்கேற்பாளர் புரிந்து ஏற்றுக்கொண்ட பிறகே பதிவு தொடங்க வேண்டும்.

உதாரணமாக, சுவடுகள் படிவம் (இணைப்பு 2A), பதிவின் போது பங்கேற்பாளர்கள் இடைநிறுத்தலாம், மறுக்கலாம் அல்லது பங்கேற்பிலிருந்து விலகலாம் என்று குறிப்பிடுகிறது. குறிப்பிட்ட வணிகமற்ற பயன்பாடுகளுக்காக பிரத்தியேகமற்ற, உரிமைத்தொகை இல்லாத, நிரந்தர மற்றும் திரும்பப்பெற முடியாத உரிமத்தை வழங்குவதாகவும், அதேவேளை பதிப்புரிமையும் தார்மீக உரிமைகளும் கலைஞரிடமே தொடரும் என்றும் அது முன்மொழிகிறது. இந்நிபந்தனைகளுக்கு முக்கியமான விளைவுகள் உள்ளதால் அவை நேரடியாக விளக்கப்பட வேண்டும். குறிப்பாக, கள அமர்வில் பங்கேற்பதை நிறுத்தும் உரிமையும் ஏற்கனவே காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட பொருட்களை நிர்வகிக்கும் நிபந்தனைகளும் வேறுபட்டவை என்பதை குழு தெளிவுபடுத்த வேண்டும்.

சூழ்நிலைகள் மாறும்போது ஒப்புதலை மீண்டும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். உதாரணமாக, கட்டுப்பாடுள்ள ஒரு சடங்கை ஆவணப்படுத்துவதற்கு முன், வேறு குடும்ப உறுப்பினரைப் பதிவு செய்வதற்கு முன், பொருளை இணையத்தில் வெளியிடுவதற்கு முன் அல்லது கண்காட்சியில் ஒரு பகுதியைப் பயன்படுத்துவதற்கு முன் இதைச் செய்ய வேண்டும். கேமராவை நிறுத்துமாறு, ஒரு கேள்விக்கு பதிலளிக்க வேண்டாம் என, அல்லது செயல்விளக்கத்தின் குறிப்பிட்ட பகுதியை ஆவணப்படுத்த வேண்டாம் என பங்கேற்பாளர் கோரலாம்.இது அவர்களின் முழுமையான உரிமையாகும்.

கட்டணம் மற்றும் செலவுகளைப் பற்றி ஒப்புதல் ஏற்படுத்துங்கள்.

கலைஞர்களும் கலை வல்லுநர்களும் தமது நேரம், நிபுணத்துவம் மற்றும் அறிவுசார் உழைப்பை வழங்குகின்றனர். முன்மொழியப்பட்ட பணியோட்டம் அவர்களை ஊதியம் பெறும் ஆலோசகர்களாகக் கருதுகிறது; இசைவுப் படிவம் (அ) ஒப்புதல் படிவம் அந்தக் கட்டணத்தை மதிப்பூதியம் (honorarium) என விவரிக்கிறது. ஒரு திட்டம் ஒரே மாதிரியான சொற்களைப் பயன்படுத்தி பின்வருவனவற்றைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்:

  • நாம் அவர்களுக்கு செலுத்த வேண்டிய தொகை;
  • அந்தக் கட்டணம் எந்தச் செயல்பாடுகளை எந்த நேரத்தை உள்ளடக்குகிறது;
  • எப்போது, எவ்வாறு அது செலுத்தப்படும்;
  • பயணம், உணவு, தங்குமிடம் அல்லது பொருட்செலவுகள் திருப்பிச் செலுத்தப்படுமா;
  • இணைபணியாளர்களுக்கும் உடன் நிகழ்த்துநர்களுக்கும் தனித்தனியாகக் கட்டணம் வழங்கப்படுமா.

கட்டணம், பங்கேற்பாளரின் அறிவு, நிகழ்த்துதல் அல்லது பதிப்புரிமையை வாங்குவதாக முன்வைக்கப்படக் கூடாது. உதாரணமாக, சுவடுகள் ஒப்புதல் படிவம், மதிப்பூதிய உரிமையைக் கையளிப்பதில்லை என்றும் கலைஞரின் எதிர்கால நிகழ்த்துதல்களையோ வணிகப் பயன்பாட்டையோ கட்டுப்படுத்துவதில்லை என்றும் கூறுகிறது.

பரஸ்பரப் பொறுப்பை உறுதிப்படுத்துங்கள்

ஆவணப்படுத்தலிலிருந்து பங்கேற்பாளர் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை முதல் உரையாடலிலேயே விளக்க வேண்டும். திட்டத்தைப் பொறுத்து, புகைப்படங்கள் மற்றும் பதிவுகளின் நகல்கள், மறுபரிசீலிக்கப்பட்ட கலைஞர்களின் சுயவிவரம், உரிய அங்கீகாரம், காப்பகப் பாதுகாப்பு அல்லது கற்பித்தலும் அறிவுப் பரிமாற்றமும் நடைபெற உதவும் பொருட்கள் ஆகியவை இதில் இருக்கலாம்.

திட்டத்தால் வழங்க இயலாத வேலைவாய்ப்பு, விளம்பரம், அரசு அங்கீகாரம் அல்லது நிதியுதவியை வாக்குறுதி அளிக்க வேண்டாம். பரஸ்பரப் பொறுப்பு என்பது குறிப்பிட்டும் நிறைவேற்றக்கூடியும் உள்ள உறுதிப்பாடுகளைக் கொண்டிருக்க வேண்டும். திட்டத்தை எவ்வாறு தொடர்புகொள்வது, தமது சுயவிவரத்தை எவ்வாறு மறுபரிசீலனை செய்வது, திருத்தம் கோருவது எப்படி, தவறான பயன்பாட்டை எவ்வாறு புகாரளிப்பது என்பன பங்கேற்பாளருக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.

சூழலுக்கேற்ற மரியாதையான நடைமுறைகளைப் பின்பற்றுங்கள்

மரியாதையான நடத்தை எதை வேண்டுகிறது என்பதை ஊகிக்காமல் கேட்டு அறியுங்கள். இது உடை, காலணி, அமர்வு முறை, உணவு, பாலின அல்லது சடங்கு எல்லைகள், கருவிகளை கையாளுதல், புனித இடங்களில் நுழைதல், குறிப்பிட்ட நபர்கள் அல்லது பொருட்களைப் புகைப்படம் எடுப்பது, மூத்தோர் அல்லது ஆசிரியர்களை எவ்வாறு அழைக்க வேண்டும் என்பவற்றைச் சார்ந்திருக்கலாம்.

நமது குழு நேரத்திற்கு வர வேண்டும், இடையூறை குறைக்க வேண்டும், தேவையற்ற கருவிகளைத் தவிர்க்க வேண்டும், மேலும் பங்கேற்பாளரின் வீடு அல்லது நிகழ்த்துதல் இடத்தை எந்தக் கட்டுப்பாடும் இல்லாத பதிவிடமாக ஒருபோதும் கருதக் கூடாது.

ஒரு வெற்றிகரமான முதல் சந்திப்பு கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டியதில்லை. அதன் சரியான விளைவு என்னவெனில்: என்ன ஆவணப்படுத்தப்படும், அது ஏன் முக்கியம், எவ்வளவு நேரம் ஆகலாம், என்ன கட்டணமும் பரஸ்பரப் பொறுப்பும் வழங்கப்படும், பொருள் எவ்வாறு பயன்படுத்தப்படலாம், பங்கேற்பாளர் எதை ஏற்கலாம், மறுக்கலாம் அல்லது கட்டுப்படுத்தலாம் என்பதைக் குறித்து இருபுறமும் பகிர்ந்து கொண்ட தெளிவான புரிதலை உருவாக வேண்டும்.