2.1 கலைஞர் அல்லது கலை வல்லுநர்கள் யார்?

ஒரு நிகழ்த்துக் கலையை ஆவணப்படுத்தும்போது, “கலைஞர்” என்ற சொல் மேடையின் மையத்தில் இருப்பவரை மட்டும் குறிக்கக் கூடாது. ஒரு கலைவடிவம், பல்வேறு வகையான அறிவுத்திறன்களைத் தாங்கி நிற்கும் பெரிய மனித வலையமைப்பால் பொதுவாக நிலைபெறுகிறது. இதில் முதன்மை நிகழ்த்துநர்கள், பாடகர்கள், நடனக் கலைஞர்கள், பக்கவாத்தியக் கலைஞர்கள், ஆசிரியர்கள், கருவி உருவாக்குபவர்கள், சடங்கு நிபுணர்கள், கலைக்குழுத் தலைவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், குடும்ப மூத்தோர், ஆடை அல்லது துணைப்பொருள் தயாரிப்பாளர்கள், நிகழ்வைத் தயாரிக்கவோ ஆதரிக்கவோ செய்பவர்கள் உள்ளிட்டோர் இருக்கலாம். சில மரபுகளில், அறிவு ஒரே அங்கீகரிக்கப்பட்ட நபருக்குச் சொந்தமானதாக இல்லாமல், ஒரு குடும்பம், மரபுவழி, கலைக்குழு அல்லது சமூகத்திடம் பகிர்ந்து நிலைத்திருக்கலாம்.

இந்தக் கையேடு, ஒரு கலையைப் புரிந்துகொண்டு, அதன் நடைமுறையில் ஆழமாகப் பங்கேற்று, அதை வடிவமைத்து செம்மைப்படுத்தி, பிறருக்குப் பயிற்சி அளித்து, பரந்த சமூகத்துடன் பகிர்பவரை கலைஞராக விவரிக்கிறது. கலைஞர்கள் ஒரு நிலையான வடிவத்தை அப்படியே மீண்டும் உருவாக்குபவர்கள் மட்டுமல்ல என்பதையும் இது வலியுறுத்துகிறது. எது தொடர வேண்டும் என்பதைத் தீர்மானித்துக்கொண்டே, பார்வையாளர்கள், சூழ்நிலைகள் மற்றும் மாறிவரும் சமூக யதார்த்தங்களுக்கு அவர்கள் பதிலளிக்கிறார்கள். கலைஞர் வினாப்பட்டியல் (இணைப்பு 1), ஆசிரியர்கள், குடும்ப மரபுகள், தொடக்ககாலத்திலிருந்து துணைபுரியும் பாத்திரங்கள், சக நிகழ்த்துநர்கள், மாணவர்கள் மற்றும் அறிவுப் பரிமாற்றம் குறித்து கேட்பதன் மூலம் இந்தப் புரிதலை விரிவுபடுத்துகிறது. இவ்வாதாரங்கள் சேர்ந்து காட்டுவது என்னவெனில், கலை சார்ந்த அதிகாரம் விருதுகள் அல்லது பொதுமக்கள் மத்தியில் கிடைக்கும் வெளிப்படையான அங்கீகாரம் மூலம் மட்டுமல்ல; நிகழ்த்துதல், நீண்ட அனுபவம், கற்பித்தல், சடங்கு பொறுப்பு, கைவினைத் திறன், மரபுவழிப் பரிமாற்றம் அல்லது சமூக அங்கீகாரம் ஆகியவற்றின் மூலமும் உருவாகலாம்.

இதனால், “கலைஞர்” என்ற சொல்லுடன் “கலை வல்லுநர்கள்” என்ற சொல்லையும் பயன்படுத்துவது பயனுள்ளதாகும். கலை வல்லுநர்கள் தம்மை ஒரு தொழில்முறைக் கலைஞராகக் குறிப்பிடாமல் இருக்கலாம்; பொதுவெளியில் நிகழ்த்தாமலும் இருக்கலாம். ஒரு மூத்தவர் பாடல்களின் முந்தைய வடிவங்களை நினைவில் வைத்திருக்கலாம். ஒரு குடும்ப உறுப்பினர் அந்தக் கலை எந்தச் சூழ்நிலைகளில் நிகழ்த்தப்படுகிறது என்பதை அறிந்திருக்கலாம். ஒரு பக்கவாத்தியக் கலைஞர் தனிச்சிறப்பான தாள அறிவைத் தாங்கியிருக்கலாம். ஒரு படைப்பாளி கருவியின் பொருட்கள் மற்றும் கட்டுமான முறையைப் புரிந்திருக்கலாம். ஒரு சடங்கு நிபுணர், ஒரு நிகழ்த்துதல் எப்போது, எங்கே, யாரால் நடைபெறலாம் என்பதைத் தீர்மானிக்கலாம். இவர்கள் ஒவ்வொருவரும் அந்தக் கலையின் அறிவு அமைப்பின் வேறுபட்ட ஒவ்வொரு பகுதியையும் தாங்குகின்றனர். தங்களின் பங்களிப்பை நல்குகின்றனர்.

ஒரு பங்கேற்பாளரின் அடையாளத்தை முன்கூட்டியே நாம் தீர்மானிக்கக்கூடாது. அந்த நபர் தம்மை எந்தப் பெயரால், எவ்வாறு விவரிக்க விரும்புகிறார் என்பதை முதலில் கேட்டு பின்வருவனவற்றைப் பதிவு செய்ய வேண்டும்.

சமூகம், சாதி, குலம், மதம் அல்லது தொல்குடி அடையாளங்கள் ஒரு கலையைப் புரிந்துகொள்வதில் முக்கியமானவையாக இருக்கலாம்; அதே நேரத்தில் அவை நுணுக்கமாக அணுக வேண்டியவையும் ஆகும். அவை பங்கேற்பாளர் பயன்படுத்தும் சொற்களிலேயே, அவரின் ஒப்புதலுடன் மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும். ஒருவரின் விருப்பமான அடையாளத்தை நிர்வாக வகைப்பாட்டால் மாற்றகூடாது; ஒரே கலையுடன் தொடர்புடைய அனைவரும் தம்மை ஒரே விதமாக விவரிப்பார்கள் என்றும் கருதக்கூடாது.

ஒரு பங்கேற்பாளர் ஒரே நேரத்தில் பல பாத்திரங்களை வகிக்கலாம். ஒருவர் ஒரு சூழலில் நிகழ்த்துநராகவும், மற்றொரு சூழலில் ஆசிரியராகவும், பொது நிகழ்ச்சிகளில் கலைக்குழுத் தலைவராகவும், சமூகத்துக்குள் சடங்கு மரபுப் பொறுப்பாளராகவும் இருக்கலாம். இப்பாத்திரங்களை ஒரே “கலைஞர்” என்ற அடையாளத்துக்குள் சுருக்காமல் தனித்தனியாகப் பதிவு செய்ய வேண்டும்.

முதல் உரையாடலின் போது கேளுங்கள்:

“யாரின்றி இந்தக் கலை தொடர்ந்து நிலைக்க முடியாது?”

இந்தக் கேள்விக்கான பதில், கண்களுக்குப் புலப்படும் நிகழ்த்தலின் பின்னால் இருக்கும் விரிந்த மனித வலையமைப்பை வெளிப்படுத்த உதவுகிறது. குழு வேறு யாருடன் பேச வேண்டும், அவர்களை எவ்வாறு அணுக வேண்டும் என்பதையும் பங்கேற்பாளரிடம் கேளுங்கள். இதன் மூலம், கூட்டாகத் தாங்கப்படும் ஒரு மரபின் ஒரே அதிகாரமிக்க நபராக ஒரு பிரபல நிகழ்த்துநரை மட்டும் காப்பகம் காட்டுவதைத் தவிர்க்கலாம்.

எனவே, ஒரு கலைஞர் சுயவிவரம் ஒருவரின் வாழ்க்கை மற்றும் அவருடைய உறவுகள் இரண்டையும் ஆவணப்படுத்த வேண்டும். அவருக்குக் கற்றுக்கொடுத்தவர் யார், அவர் யாருடன் நிகழ்த்துகிறார், அந்த நடைமுறையை ஆதரிப்பவர் அல்லது அனுமதிப்பவர் யார், அவர் யாருக்குக் கற்றுக்கொடுத்துள்ளார், மேலும் அந்தக் கலையிடத்திலான தமது பொறுப்புகளை அவர் எவ்வாறு புரிந்துகொள்கிறார் என்பதைக் காட்டும் தகவல்களாக இருக்க வேண்டும்.