6.5 ஆவணப்படுத்தலிலிருந்து நிகழ்விட/ இடவெளிப் பதிவுக்குச் செல்லுதல்
ஒரு இடவெளிப் பதிவு பெயர்கள், அமைவிடம், உடலியல் விவரிப்பு, நினைவு, நிகழ்த்தல் பயன்பாடு, அதிகாரம், அணுகல், மாற்றம் மற்றும் ஆவணப்படுத்தல் ஊடகங்களை ஒரே ஒழுங்கான பதிவாக இணைக்கிறது. களத்தில் நேரில் இல்லாத வாசகர் கூட இந்த இடம் என்ன, அது ஏன் முக்கியம், யாருடைய அறிவு இந்த விவரிப்பை வடிவமைத்தது, நிகழ்த்தல் அதனுடன் எவ்வாறு தொடர்புபடுகிறது, எதை ஆவணப்படுத்த முடிந்தது அல்லது முடியவில்லை என்பதைக் புரிந்துகொள்ள முடியும் வகையில் அது இருக்க வேண்டும். இடவெளிக் கூறு தனித்த அமைவிடப் புலமாக மாறாமல் கலைவடிவம், நிகழ்த்தல், கலைஞர் மற்றும் இசைக்கருவி அல்லது பொருள் ஆகியவற்றோடு தொடர்ந்து இணைந்திருக்கும்.1
ஆதாரங்களை ஒன்றிணையுங்கள்
விரும்பப்படும் மற்றும் மாற்றுப் பெயர்கள், நிர்வாக அமைவிடம், உள்ளூரில் பொருள் கொண்ட திசை விளக்கங்கள், களக் குறிப்புகள், புகைப்படங்கள், பாதை அல்லது அமைப்பு குறித்த விளக்கக் குறிப்புகள், அறிவுத் தாங்கிகளுடனான உரையாடல்கள், அணுகல் முடிவுகள் மற்றும் தொடர்புடைய கூறுப் பதிவுகளுக்கான இணைப்புகள் ஆகியவற்றை ஒன்றாக வைத்திருங்கள். முன்மொழியப்பட்ட பணிச்சுற்று பொருள்சார் மற்றும் இடவெளிப் புகைப்படங்கள், களக் குறிப்புகள், சூழல் விளக்கம், இருமொழி மெட்டாடேட்டா, உரிமைத் தகவல் மற்றும் பாராடேட்டா ஆகியவற்றை ஆவணப்படுத்தலின் ஒன்றோடொன்று தொடர்புடைய பகுதிகளாகக் கருதுகிறது.3
நிகழ்விட /இடவெளி எந்தச் சூழலில் ஆவணப்படுத்தப்பட்டது என்பதையும் பதிவு செய்யுங்கள். அது உண்மையான நிகழ்த்தலின் போது கவனிக்கப்பட்டதா, தனியாகச் சென்று பார்வையிடப்பட்டதா, நினைவிலிருந்து விவரிக்கப்பட்டதா, காலியாக இருந்தபோது புகைப்படம் எடுக்கப்பட்டதா, அல்லது இவற்றின் சேர்க்கையால் ஆவணப்படுத்தப்பட்டதா? சில பகுதிகளை அணுக முடியவில்லையா அல்லது பதிவு செய்ய முடியவில்லையா? வானிலை, கட்டுமானம், கூட்டம் அல்லது தற்காலிக மேடை காண முடிந்தவற்றை மாற்றியதா? ஆவணப்படுத்தல் தளத்தின் முழுமையான காட்சி என்று பின்னர் பயன்படுத்துபவர்கள் தவறாகக் கருதாமல், பதிவு ஏன் இவ்வாறு உருவானது என்பதைப் பாராடேட்டா புரிந்துகொள்ள உதவுகிறது.3
இடத்தை மையமாகக் கொண்டு எழுதுங்கள்
பதிவை விரும்பப்படும் உள்ளூர் பெயரிலிருந்து தொடங்கி, பொருத்தமான மாற்றுப் பெயர்களையும் சேருங்கள். பகிர அனுமதிக்கப்பட்ட அளவு வரை நிர்வாகச் சொற்களாலும் உள்ளூரில் பொருள் கொண்ட அடையாளங்களாலும் அந்த இடத்தை அமைவிடப்படுத்துங்கள். பங்கேற்பாளர்கள் அதை எந்த வகையான இடவெளியாகப் புரிந்துகொள்கிறார்கள், அது எப்போது முக்கியத்துவம் பெறுகிறது என்பதைக் கூறுங்கள். பின்னர் நிகழ்த்தலுக்கு முக்கியமான உடலியல் வடிவத்தை விவரியுங்கள்: மேற்பரப்பு, அளவு, அமைப்பு, திசையமைவு, பாதை, நுழைவாயில்கள், பார்வையாளர் ஒழுங்கு, ஒலியியல் தன்மைகள் மற்றும் முக்கிய பொருட்களின் இடமமைவு.
உடலியல் விவரிப்பிலிருந்து பண்பாட்டு உறவுகளுக்கு நகருங்கள். இடவெளிக்குப் பொறுப்பானவர் யார்? எந்த நிகழ்வுகள் அதை பயன்பாட்டுக்குக் கொண்டு வருகின்றன? எந்த எல்லைகள் அல்லது நுழைவு விதிகள் முக்கியம்? அதனுடன் எந்த நினைவுகள் மற்றும் முந்தைய பயன்பாடுகள் தொடர்புடையவை? அந்த இடம் எவ்வாறு மாறியுள்ளது? இன்றைய எந்த நிலைகள் கலைப் பயிற்சியாளர்களுக்கு கவலை அளிக்கின்றன அல்லது ஆதரவு தருகின்றன? ஒவ்வொரு கூற்றையும் பெயரற்ற உண்மையாகக் காட்டாமல், இவ்விளக்கங்கள் எங்கிருந்து வந்தன என்பதைக் பதிவு தெளிவாகக் காட்ட வேண்டும்.
அங்கே நடந்த நிகழ்த்தலை மட்டும் அல்ல, இந்த இடவெளியையே விவரியுங்கள்
ஒரு குறிப்பிட்ட நிகழ்வு அந்த அமைவிடத்தை எவ்வாறு பயன்படுத்தியது என்பதைப் பிரிவு 4 பதிவு செய்கிறது: நிகழ்த்துபவர்கள் எங்கு நின்றார்கள், எந்தப் பாதையைப் பின்பற்றினார்கள், பார்வையாளர்கள் எவ்வாறு கூடினர், அந்த நிகழ்வில் என்ன நடந்தது என்பதனை. பிரிவு 6 அந்த முழு நிகழ்வுப் பதிவை மீண்டும் கூறக்கூடாது. மாறாக, பல நிகழ்வுகளைக் கடந்து அந்த இடத்தை விளக்க வேண்டும்: அது என்ன பெயரில் அழைக்கப்படுகிறது, எவ்வாறு ஒழுங்கமைக்கப்படுகிறது, எந்தப் பயன்பாடுகளை ஆதரிக்கிறது, எந்தக் கட்டுப்பாடுகள் அதை நிர்வகிக்கின்றன, மக்கள் அதனுடன் எந்த வரலாறுகளை இணைக்கிறார்கள் என்பதைக் கூற வேண்டும். நிகழ்வு சார்ந்த விவரங்களுக்கு தொடர்புடைய நிகழ்த்தல் பதிவை இணைக்குங்கள்.
இதே கொள்கை கலைவடிவம், கலைஞர் மற்றும் இசைக்கருவி அல்லது பொருளுக்கும் பொருந்துகிறது: அவற்றின் முழுப் பதிவுகளை மீண்டும் நகலெடுக்காமல் தொடர்புடைய பதிவுகளை இணைக்குங்கள். உறவுமுறை காப்பகம் மீளுரைப்பின் மூலம் அல்ல, இணைப்புகளின் மூலம் ஆழம் பெறுகிறது.
ஒவ்வொரு கூற்றின் அடிப்படையையும் தெளிவாகத் தெரியச் செய்யுங்கள்
அவதானிப்பு, பங்கேற்பாளரின் விளக்கம் மற்றும் களப்பணியாளரின் ஊகம் ஆகியவற்றைத் தனித்தனியாக வைத்திருங்கள். “தரை பதிக்கப்பட்ட கான்கிரீட்டாக உள்ளது” என்பது அவதானிப்பாக இருக்கலாம். “இந்தத் தரைப்பதிப்பு நடனக் கலைஞர்களின் கால்நிறுத்தத்தை மாற்றியது” என்பது கலைப் பயிற்சியாளர் கூறியதெனில் அவரைச் சுட்டிக் கூற வேண்டும். “இந்த உள் கோடு ஒரு சடங்கு எல்லை” என்ற கூற்று, குறிப்பாக அந்த எல்லை கண்ணுக்குத் தெரியாதபோது, அதை விளக்கிய நபர் அல்லது குழுவை அடையாளப்படுத்த வேண்டும். இடவெளியின் வரலாறு, பயன்பாடு அல்லது அதிகாரத்தைப் பற்றி மக்கள் ஒவ்வாத கருத்துகளைத் தெரிவித்தால், அந்த வேறுபாட்டைப் பாதுகாத்து பதிவு செய்யுங்கள்.
மொழிபெயர்ப்பு ஒரு முக்கிய வேறுபாட்டை நீக்கிவிடும் இடங்களில் உள்ளூர் இடப்பெயர்கள், திசையமைவு சொற்கள் மற்றும் இடவெளிசார் சொற்களை அப்படியே வைத்திருங்கள். இருமொழி விவரிப்பு பொருளின் துல்லியத்திற்காக மறுஆய்வு செய்யப்பட வேண்டும்; ஆங்கிலப் பதிவை இயந்திரமாக மொழிபெயர்த்து உருவாக்கப்படக்கூடாது. இடவெளிப் பதிவை எழுதிய அல்லது தொகுத்த நபர், அதில் பிரதிபலிக்கும் அறிவை வழங்கிய நபர்களிலிருந்து தனியாக அடையாளப்படுத்தப்பட வேண்டும்.
ஊடகங்களையும் உறவுகளையும் இணைத்துப் பாதுகாக்க வேண்டும்
புகைப்படங்கள் அவை ஆதரிக்கும் விவரிப்புடன் இணைந்திருக்க வேண்டும். பாதைப் படம் எந்தப் பாதைப் பகுதியைக் காட்டுகிறது என்பதைத் தெரிவிக்க வேண்டும்; முழுக் காட்சி புகைப்படம் தேவையான இடங்களில் பார்வைத் திசையைக் குறிப்பிட வேண்டும்; மாற்றமடைந்த மேற்பரப்பின் படம் தொடர்புடைய களக் குறிப்பு அல்லது பங்கேற்பாளர் விளக்கத்துடன் இணைக்கப்பட வேண்டும். படம் எடுக்க முடியாத இடங்களில், பின்னர் பயன்படுத்துபவர்கள் ஏன் அந்த அம்சம் காணப்படவில்லை என்று ஊகிக்க வேண்டிய நிலை ஏற்படாதபடி கட்டுப்பாட்டைத் தெளிவாகக் குறிப்பிடுங்கள்.
அந்த இடத்தில் நடைபெற்ற நிகழ்த்தல் பதிவுகளுடனும், அதன் விரிவான பண்பாட்டு உறவுகளை விளக்கும் கலைவடிவம், கலைஞர் மற்றும் இசைக்கருவி அல்லது பொருள் பதிவுகளுடனும் இடவெளிப் பதிவை இணைத்துப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். இடம், நிகழ்வு, மக்கள், நடைமுறை மற்றும் பொருள்சார் பண்பாட்டை ஒரே வேறுபாடற்ற பதிவாகக் கலக்காமல் அவற்றை ஒன்றோடொன்று தொடர்புபடுத்திப் பின்தொடர முடியும் வகையிலேயே கூறுக் கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.1
மறுஆய்வுக்காக பதிவை மீண்டும் வழங்குங்கள்
பதிவை இறுதி செய்வதற்கு முன், முக்கிய விவரிப்பையும் தொடர்புடைய அணுகல் முடிவுகளையும் களப்பணியின் போது மறுஆய்வில் ஈடுபட ஒப்புக்கொள்ளப்பட்ட கலைஞர்கள், கலை வல்லுநர்கள், பாதுகாவலர்கள் அல்லது பிற நபர்களிடம் மீண்டும் வழங்குங்கள். பெயர்கள், எழுத்துவடிவம், உள்ளூரில் பொருள் கொண்ட திசை விளக்கங்கள், வரலாறுகள், எல்லைகள், பயன்பாட்டின் விவரிப்புகள், மாற்றங்கள், புகைப்படங்கள், படவிளக்கங்கள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட தகவலின் சொல்வடிவம் ஆகியவற்றைச் சரிபார்க்கச் சொல்லுங்கள். பங்கேற்பாளர் மறுஆய்வு தவிர்க்கக்கூடிய பிழைகளைச் சரிசெய்து வேண்டாத வெளிப்பாட்டைத் தடுக்க வேண்டும்; அனைவரும் ஒரே விளக்கத்தில் ஒத்துக்கொள்ள வேண்டுமென வற்புறுத்தக் கூடாது.
துல்லியத்துடன் அணுகலையும் மறுஆய்வு செய்யுங்கள். எது பொதுவில் இருக்கலாம், எது மெட்டாடேட்டாவாக மட்டும் இருக்க வேண்டும், எது சமூகத்திற்குள் மட்டும் அல்லது கட்டுப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும், துல்லியமான பெயர்கள், இடநிலைக் கோட்புள்ளிகள், பாதை விவரங்கள் அல்லது படங்களுக்கு சிறப்பு நிபந்தனைகள் தேவைப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்துங்கள். ஆவணப்படுத்தலின் பல பகுதிகளுக்கு வேறு வேறு கட்டுப்பாடுகள் இருந்தால், முழு இடவெளிப் பதிவையும் ஒரேபோல் திறந்ததாக அல்லது மூடியதாகக் கருதாமல் அந்த வேறுபாடுகளைப் பாதுகாத்து பதிவு செய்யுங்கள்.5
இடவெளிப் பதிவை புதுப்பிக்கக்கூடியதாக வைத்திருங்கள்
ஒரு இடவெளிப் பதிவு குறிப்பிட்ட காலத்தில் ஒரு இடம் எவ்வாறு புரிந்துகொள்ளப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டது என்பதைப் பதிவு செய்கிறது. சாலைகள் மாறலாம், மேடைகள் மறுபடியும் கட்டப்படலாம், திறந்த மைதானம் விரிவடையலாம் அல்லது சுருங்கலாம், சடங்கு பாதைகள் மாற்றப்படலாம், பாதுகாவலர் பொறுப்பு மாறலாம், புதிய பயன்பாடுகள் உருவாகலாம். முந்தைய பதிவைப் பாதுகாத்தபடி எதிர்கால ஆவணப்படுத்தல் புதிய அவதானிப்புகள் அல்லது புதுப்பிப்புகளைச் சேர்க்கக்கூடியதாக இருக்க வேண்டும். மறுஆய்வு அல்லது திருத்தம் கடந்தகாலத்தை அமைதியாக அழித்து எழுதாமல் மாற்றத்தைக் கண்கூடாகத் தெரியச் செய்ய வேண்டும்.
பதிவை நிறைவு செய்வதற்கு முன் கேளுங்கள்:
- பங்கேற்பாளர்கள் உண்மையில் பயன்படுத்தும் பெயர்களாலும் பொருத்தமான மாற்றுப் பெயர்களாலும் இந்த இடத்தை நாம் தெளிவாக அடையாளம் கண்டுள்ளோமா?
- நிர்வாக அமைவிடத்தையும் உள்ளூரில் பொருள் கொண்ட அடையாளங்களையும் திசை விளக்கங்களையும் நாம் வேறுபடுத்தியுள்ளோமா?
- இந்த இடவெளி எதை உள்ளடக்குகிறது - நிலையான தளம், பாதை, தற்காலிக மைதானம் அல்லது பண்பாட்டால் வரையறுக்கப்பட்ட பகுதி - என்பதை நாம் தெளிவுபடுத்தியுள்ளோமா?
- தரை, திசையமைவு, இயக்கம், பார்வையாளர் ஒழுங்கு மற்றும் ஒலியியல் தன்மைகள் உள்ளிட்ட நிகழ்த்தலை உண்மையில் வடிவமைக்கும் உடலியல் அம்சங்களை நாம் ஆவணப்படுத்தியுள்ளோமா?
- எல்லா வகையான அதிகாரமும் ஒரே நபரிடம் இருக்கிறது என்று கருதாமல், அந்த இடத்தை யார் பராமரிக்கிறார், நிர்வகிக்கிறார் அல்லது பயன்பாட்டுக்கு அனுமதி வழங்குகிறார் என்பதைக் கண்டறிந்துள்ளோமா?
- பங்கேற்பாளர்கள் பகிரத் தயாராக இருக்கும் அளவு வரை எல்லைகள், நுழைவுநிலைகள் மற்றும் அணுகல் விதிகளை நாம் பதிவு செய்துள்ளோமா?
- நினைவுகள் மற்றும் வரலாற்றுக் கூற்றுகளின் மூலத்தைத் தெளிவுபடுத்தியுள்ளோமா; மாறுபட்ட குறிப்புகள் அல்லது தெளிவின்மைகளையும் பாதுகாத்துள்ளோமா?
- மாற்றத்தைக் தானாகவே வீழ்ச்சியாகக் கருதாமல், மாற்றங்களையும் தற்போதைய நிலைகளையும் பங்கேற்பாளர்களின் பார்வைகளின் வழியாக நாம் ஆவணப்படுத்தியுள்ளோமா?
- புகைப்படங்கள், களக் குறிப்புகள் மற்றும் இடவெளிசார் விளக்கக் குறிப்புகள் பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளனவா; விடுபாடுகளும் கட்டுப்பாடுகளும் விளக்கப்பட்டுள்ளனவா?
- கலைவடிவம், கலைஞர், நிகழ்த்தல் மற்றும் இசைக்கருவி அல்லது பொருள் பதிவுகளுக்கான இணைப்புகள் சரியாக உள்ளனவா; பெயர்கள், விவரிப்புகள் மற்றும் அணுகல் முடிவுகள் மறுஆய்வு செய்யப்பட்டுள்ளனவா?
இந்தக் கேள்விகளுக்கு விடை காணப்பட்டிருந்தால், களப்பணியாளர் ஒரு நிகழ்த்தல் எங்கு நடந்தது என்பதை மட்டும் பதிவு செய்வதைத் தாண்டியுள்ளார். அதன் விளைவு சூழலுடன் கூடிய, மூலத்தைத் தொடரக்கூடிய மற்றும் மறுஆய்வு செய்யக்கூடிய ஒரு இடவெளிப் பதிவு: பயன்பாடு, நினைவு, இயக்கம், ஒலி, அதிகாரம் மற்றும் மாற்றம் ஆகியவற்றின் வழியாக ஓர் இடம் எவ்வாறு அர்த்தமுடையதாக உருவாகிறது என்பதை காட்டுவதோடு, எதை ஆவணப்படுத்தலாம் அல்லது பகிரலாம் என்பதில் விதிக்கப்பட்ட எல்லைகளையும் மதிக்கும் பதிவு.