2.5 சந்திப்பிலிருந்து கலைஞர் சுயவிவரத்துக்கு
நேர்காணல் அல்லது பதிவு முடிந்தவுடன் கள ஆவணப்படுத்தல் முடிவடைவதில்லை. குறிப்புகள், புகைப்படங்கள், நிகழ்த்துதல்கள், செயல்விளக்கங்கள் மற்றும் உரையாடல்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு, கலைஞரைத் துல்லியமாகப் பிரதிநிதித்துவப்படுத்தும், அவரது வாழ்க்கையை கலைப் பயிற்சியுடன் இணைக்கும், எதிர்கால காப்பகப் பயனர்கள் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு சுயவிவரமாக மாற்றப்பட வேண்டும்.
ஒரு கலைஞர் சுயவிவரம் என்பது கருத்துரையோ, வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கமோ அல்லது விளம்பரக் குறிப்புபோ அல்ல. அது ஆவணப்படுத்தல் செயல்முறையின் போது பங்கேற்பாளர் பகிர்ந்தவற்றை அடிப்படையாகக் கொண்ட சூழல்சார் பதிவு. உதாரணமாக, சுவடுகள் கலைஞர் வாழ்க்கை வரலாறு வார்ப்புரு (Suvadugal Artist Bio Template), கிடைக்கக்கூடிய நேர்காணல் பதில்களை மட்டுமே பயன்படுத்தவும், கற்பனையையும் மிகைப்படுத்தலையும் தவிர்க்கவும், கலைஞரின் பார்வையைப் பாதுகாக்கவும், பண்பாட்டு காப்பகத்துக்கு ஏற்ற தெளிவான மற்றும் கண்ணியமான உரை உருவாக்கவும் எழுத்தாளரை அறிவுறுத்துகிறது.
ஆவணப்படுத்தல் பதிவுகளை ஒன்றாகச் சேருங்கள்.
எழுதத் தொடங்குவதற்கு முன், கலைஞருடன் தொடர்புடைய எல்லா பொருட்களையும் ஒன்றாகச் சேருங்கள்:
- நேர்காணல் பதிவுகள் மற்றும் உரைமாற்றுகள்; பேச்சு வடிவின் எழுத்தாக்கம்.
- களக் குறிப்புகள்;
- நிகழ்த்துதல் மற்றும் செயல்விளக்கப் பதிவுகள்;
- புகைப்படங்கள் மற்றும் அவற்றின் விளக்கக்குறிப்புகள்;
- ஒப்புதல் மற்றும் உரிமைகள் தொடர்பான தகவல்கள்;
- ஆசிரியர்கள், இணைபணியாளர்கள், மாணவர்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்கள்;
- தொடர்புடைய தேதிகள், இடங்கள் மற்றும் கலைவடிவங்களின் பெயர்கள்;
- கட்டுப்பாடுகள், உறுதியின்மைகள் மற்றும் தொடர்ந்து செய்ய வேண்டிய பணிகள் குறித்த குறிப்புகள்.
ஒவ்வொரு கோப்பும் சரியான கலைஞர், தேதி, இடம் மற்றும் ஆவணப்படுத்தல் அமர்வுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துங்கள். பேச்சு வடிவில் எழுத்தாக்கம், தொகுக்கப்பட்ட தகவல்கள் ஊடகங்கள் அல்லது சுயவிவர வரைவுகள் தயாரிக்கும்போது, மூலப் பதிவுகளைப் பாதுகாத்து, தெளிவாக அடையாளப்படுத்தப்பட்ட நகல்களில் இருந்து வேலை செய்யுங்கள்.
முன்மொழியப்பட்ட பணிக்கானதீர்மானம் கோப்புகளை ஒழுங்குபடுத்துதல், பெயரிடுதல், ஊடகச் செயலாக்கம், தரச் சோதனை, மற்றும் விளக்கவுரு, கட்டமைப்பு, நிர்வாகத் தகவல்களை உருவாக்குதல் ஆகியவற்றை வேண்டுகிறது. மேலும், பராடேட்டா (paradata) எனப்படும் தகவல்களும் தேவைப்படுகின்றன: ஆவணப்படுத்தல் எவ்வாறு உருவாக்கப்பட்டது, என்ன முடிவுகள் எடுக்கப்பட்டன, என்ன கட்டுப்பாடுகள் இறுதி பதிவை பாதித்தன என்பதைக் கூறும் தகவல்கள்.
பங்கேற்பாளர் அமர்வை நிறுத்தியதால், ஒரு சடங்கைப் பதிவு செய்ய முடியாததால், அல்லது கருவி செயலிழந்ததால் பதிவு முழுமையற்றதாக இருந்தால், அதை மனக்குறிப்பாக பதிவு செய்யுங்கள். பதிவு முழுமையாகத் தோன்ற வேண்டும் என்பதற்காக இத்தகைய வரம்புகளை மறைக்கவோ தகவலைக் கற்பனை செய்யவோ வேண்டாம்.
ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதுங்கள்
வரைவு எழுதுவதற்கு முன் உரைமாற்றையும் களக் குறிப்புகளையும் வாசியுங்கள். கலைஞரின் பயணத்தின் முக்கிய கட்டங்களையும் அவற்றை இணைக்கும் உறவுகளையும் அடையாளம் காணுங்கள். கலைஞர் வாழ்க்கை வரலாறு வார்ப்புரு ஏழு பகுதிகளை முன்மொழிகிறது:
- ஆரம்ப வாழ்க்கையும் கலையில் முதல் அடிகளும்
- பயிற்சியும் முதல் மேடை அனுபவமும்
- கலைவாழ்க்கை
- கற்பித்தலும் அடுத்த தலைமுறைக்கு வழங்குதலும்
- வளர்ச்சியும் மாற்றமும்
- அங்கீகாரமும் இணைபணியாளர்களும்
- தனிப்பட்ட சிந்தனைகள்
இந்தத் தலைப்புகள் பயனுள்ள ஒரு கட்டமைப்பை வழங்குகின்றன; ஆனால் ஒவ்வொரு சுயவிவரமும் ஒரே நீளத்தில் இருக்க வேண்டியதில்லை. ஒருவருக்கு பயிற்சி மற்றும் கற்பித்தல் குறித்து விரிவாகச் சொல்ல வேண்டும் என்று இருக்கலாம்; மற்றொருவர் நிகழ்த்துதல், சடங்கு பொறுப்பு அல்லது இணைபணி குறித்து அதிகமாகப் பேசலாம். தகவல் கிடைக்கவில்லை என்றால், அதை இயல்பாக விட்டுவிடுங்கள். தகவல் “காணவில்லை” என்று எழுத வேண்டாம்; வெளியிலிருந்து ஊகங்களைச் சேர்த்து அந்த இடைவெளியை நிரப்பவும் வேண்டாம்.
ஒவ்வொரு பகுதியும் புதிதாக ஏதாவது ஒன்றைச் சேர்க்க வேண்டும். ஒரே விருது, ஆசிரியர், நிகழ்த்துதல் அல்லது சிந்தனையை பல தலைப்புகளின் கீழ் மீண்டும் மீண்டும் எழுத வேண்டாம். வினாப்பட்டியல் பதில்களை மறுவரிசைப்படுத்திய தொகுப்பைப் போல அல்லாமல், தொடர்புடைய வாழ்க்கை வரலாறாக சுயவிவரம் வாசிக்கப்படுமாறு முழுப் பத்திகளாக எழுதுங்கள்.
கற்பனை செய்யாமல் இலகுவான சூழலை வழங்குங்கள்.
ஒரு வாசகர் பின்வருவனவற்றைப் புரிந்துகொள்ள முடியும் வகையில் சுயவிவரம் இருக்க வேண்டும்:
- கலைஞர் யார்;
- அவர் தொடர்புடைய கலைவடிவங்களும் பாத்திரங்களும் என்ன;
- அவர் எங்கே, எவ்வாறு கற்றார்;
- அவருடைய பயிற்சியுடன் தொடர்புடைய நபர்களும் சமூகங்களும் யார்;
- அவருடைய கலைப் பணி எவ்வாறு வளர்ந்தது;
- எந்தச் சூழ்நிலைகளில் அவர் நிகழ்த்துகிறார்;
- அவர் எவ்வாறு கற்பிக்கிறார் அல்லது அறிவைப் பரிமாறுகிறார்;
- அவர் கண்ட மாற்றங்கள் என்ன;
- அந்தக் கலை அவருக்கு என்னவாக அர்த்தப்படுகிறது.
சூழல், ஆவணப்படுத்தப்பட்ட பொருட்களிலிருந்தே வர வேண்டும். ஆதாரம் இல்லாத சமூக வரலாற்றைச் சேர்க்க வேண்டாம்; ஒரு கலை “பழமையானது” அல்லது “அழிந்து கொண்டிருக்கிறது” என்று ஆதாரமின்றிக் கூற வேண்டாம்; “மாமேதை”, “புராணநாயகன்/நாயகி”, அல்லது “கடைசி பயிற்சியாளர்” போன்ற சொற்களை ஆதாரமும் உரிய மேற்கோள்/அங்கீகாரமும் ஆதரிக்காவிட்டால் பயன்படுத்த வேண்டாம்.
முறையான விருதுகள் மட்டுமே கலை முக்கியத்துவத்தின் அளவுகோலாக மாறக் கூடாது. ஒரு கலைஞருக்கு நிறுவன அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றால், பங்கேற்பாளர் விவரித்த சமூக அங்கீகாரம், அவர்வகிக்கும் முக்கியப் பொறுப்பு, கற்பித்தல், நிகழ்வுகளை நிகழ்த்த அழைப்புகள் மற்றும் நீண்டகால கலை உறவுகளைச் சுட்டுங்கள்.
குரல், மறுஉரை மற்றும் விளக்கத்தை வேறுபடுத்திக் காட்டுங்கள்.
யாருடைய அறிவு பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது என்பதை சுயவிவரம் தெளிவாக்க வேண்டும். தகவல் மூன்று முக்கியமான வடிவங்களில் தோன்றலாம்:
- நேரடி மேற்கோள்: பங்கேற்பாளரின் பதிவு செய்யப்பட்ட சொற்கள் துல்லியமாக மேற்கோள் காட்டப்பட்டு அவருக்கே உரியதாகக் குறிப்பிடப்படுதல்;
- மறுஉரை: பங்கேற்பாளரின் கூற்றை அதன் பொருளை மாற்றாமல் சுருக்கமாக மறுஎழுதப்படுதல் வேண்டும்.
- ஆய்வாளர் விளக்கம்: களக் கவனிப்பு, ஆவணப்படுத்தல் முடிவுகள் அல்லது சூழல்சார் விளக்கத்தின் அடிப்படையில் வழங்கப்படும் தகவல்.
ஆய்வாளரின் விளக்கத்தை கலைஞரின் சொந்தக் கூற்றைப் போல முன்வைக்க வேண்டாம். “கலைஞர் விளக்கினார்”, “அவரது கூறலின்படி”, “அவர் நினைவுகூர்ந்தார்”, அல்லது “செயல்விளக்கத்தின் போது ஆவணப்படுத்தல் குழு கவனித்தது” போன்ற சொற்றொடர்கள் தகவலின் மூலத்தைத் தெளிவுபடுத்த வேண்டும்.
மொழிபெயர்ப்புகள் கலைஞரை அவர் இருந்ததைவிட அதிகமாக கல்விசார் அல்லது முறையான மொழியில் பேசுபவர் போல மாற்றாமல், பொருளையும் தொனியையும் பாதுகாக்க வேண்டும். பண்பாட்டுக்கே உரிய ஒரு சொல்லுக்கு திருப்திகரமான இணைச்சொல் இல்லையெனில், மூலச் சொல்லை வைத்துக் கொண்டு ஒரு சுருக்கமான விளக்கத்தை அளிக்கவும். மாற்றம், பண்பாட்டு அர்த்தம் அல்லது கட்டுப்பாடுகள் குறித்த முக்கியமான கூற்றுகள் அவற்றைச் சொன்ன பங்கேற்பாளருடன் இணைந்தே இருக்க வேண்டும்.
கலைஞர் உறுதியாக இல்லாத இடங்களில் அந்த உறுதியின்மையைப் பாதுகாத்துப் பதிவு செய்யுங்கள். இரண்டு கலைஞர்கள் வேறுபட்ட கூற்றை வழங்கினால், அவற்றை அமைதியாக ஒன்றிணைத்து ஒரே அதிகாரப்பூர்வமான பதிப்பாக மாற்ற வேண்டாம். ஒவ்வொரு சுயவிவரமும் அது உருவான பார்வையை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும்.
சுயவிவரத்தை தொடர்புடைய பிற விவரங்களுடன் இணையுங்கள்:
ஒரு கலைஞர் சுயவிவரம் தனியாக நிற்கக் கூடாது. பணியோட்டம் நேரடி நிகழ்த்துதல்கள், விளக்கச் செயல்விளக்கங்கள், சூழல்சார் நேர்காணல்கள், வாய்மொழி வரலாறுகள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றை இணைக்கும் கட்டமைப்பு உறவுகளை விவரிக்கிறது. ஆகவே, தேவையான இடங்களில் சுயவிவரம் பின்வருவனவற்றுடன் இணைக்கப்பட வேண்டும்:
- ஆவணப்படுத்தப்பட்ட நிகழ்த்துதல்கள்;
- செயல்விளக்கப் பதிவுகள்;
- தொடர்புடைய கலைவடிவங்கள்;
- கருவிகள், ஆடைகள் மற்றும் பொருட்கள்;
- நிகழ்த்துதல் அல்லது சடங்கு இடங்கள்;
- ஆசிரியர்கள், இணைபணியாளர்கள் மற்றும் மாணவர்கள்;
- தொடர்புடைய வாய்மொழி வரலாறுகள் மற்றும் புகைப்படங்கள்.
புகைப்படங்களில், தெரிந்தவரை நபர், செயல், இடம் மற்றும் தேதியை அடையாளப்படுத்தும் விளக்கக்குறிப்புகள் இருக்க வேண்டும். படத்தின் அங்கீகாரத் தகவலும் கட்டுப்பாடுகளும் அதனுடன் தொடர வேண்டும். ஒரு புகைப்படம் கவர்ச்சியாக இருப்பதால் மட்டும் அதை பயன்படுத்த வேண்டாம்; அது கலைஞரின் பாத்திரத்தையோ எடுக்கப்பட்ட சூழலையோ தவறாகச் சித்தரித்தால் பயன்படுத்தக் கூடாது.
சுயவிவரத்தை பங்கேற்பாளருடன் மறுபரிசீலனை செய்யுங்கள்.
வெளியீட்டுக்கு முன், பங்கேற்பாளர் அணுகக்கூடிய வடிவில் சுயவிவரத்தை வழங்குங்கள். அவரது விருப்பமும் எழுத்தறிவு நிலையும் பொறுத்து, இது அச்சுப் பிரதியாக, மின்னணு ஆவணமாக, ஒலிப்பதிவாக அல்லது வாய்மொழி மறுபரிசீலனையாக இருக்கலாம்.
பின்வருவனவற்றைச் சரிபார்க்க பங்கேற்பாளரிடம் கேளுங்கள்:
- அவரது பெயரின் எழுத்தாக்கமும் வடிவமும்;
- சமூகம், குடும்பம் மற்றும் இடப்பெயர்கள்;
- ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் இணைப்பணியாளர்கள்;
- பாத்திரங்கள், தேதிகள் மற்றும் நிகழ்வுகளின் வரிசை;
- மேற்கோள்களும் மொழிபெயர்ப்புகளும்;
- புகைப்படத் தேர்வும் விளக்கக்குறிப்புகளும்;
- நுணுக்கமான, சடங்கு சார்ந்த அல்லது கட்டுப்பாடுள்ள அறிவின் விளக்கங்கள்;
- அங்கீகாரம் மற்றும் அணுகல் நிபந்தனைகள்.
மறுபரிசீலனையின் போது செய்யப்பட்ட திருத்தங்களைப் பதிவு செய்யுங்கள். பெயர், தேதி அல்லது உறவுக்கான திருத்தம் சேர்க்கப்பட வேண்டும். ஒரு விளக்கத்துடன் பங்கேற்பாளர் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், அதைத் திருத்துங்கள்; அல்லது அந்த விளக்கம் யாருடையது என்பதைத் தெளிவாகக் குறிப்பிடுங்கள்; அல்லது ஆய்வாளரின் நிலைப்பாட்டை முடிவான உண்மையாக முன்வைப்பதற்குப் பதிலாக கருத்து வேறுபாட்டைப் பதிவு செய்யுங்கள்.
பங்கேற்பாளரின் மறுபரிசீலனை என்பது அவர்கள் கூறாத கூற்றுகளுக்கு அவரிடம் ஒப்புதல் பெறுவது அல்ல. தவறுகள், தவறான பிரதிநிதித்துவம், விரும்பாத வெளிப்படுத்தல் மற்றும் சூழல் குறைபாடுகள் பொது காப்பகத்தில் நுழைவதற்கு முன் அவற்றைக் கண்டறிவதே அதன் நோக்கம்.
உரிமைகளையும் அணுகலையும் உறுதிப்படுத்துங்கள்.
மெட்டாடேட்டா பதிவில் உரிமை, உரிய அங்கீகாரம், இசைவு மற்றும் அணுகல் நிபந்தனைகள் குறிப்பிடப்பட வேண்டும். சுவடுகள் இசைவுப் படிவம் கலைஞரின் பதிப்புரிமையையும் தார்மீக உரிமைகளையும் அவரிடமே வைத்துக்கொண்டு, குறிப்பிட்ட காப்பக, கல்வி, ஆய்வு மற்றும் பொதுவிழிப்புணர்வுப் பயன்பாடுகளுக்காகத் திட்டத்திற்கு, உரிமைத்தொகை இல்லாத, நிரந்தர, திரும்பப்பெற முடியாத மற்றும் வணிகமற்ற உரிமத்தை வழங்குகிறது. மேலும், கலைஞருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் உரிமையையும், திரித்தல் அல்லது இழிவுபடுத்தும் வகையிலான கையாளுதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் உரிமையையும் அது பாதுகாக்கிறது.
இந்நிபந்தனைகள் சட்டரீதியாக முக்கியமானவை. ஆகவே, ஏற்கனவே உரிமம் வழங்கப்பட்டப் பொருட்களைத் தானாகவே திரும்பப் பெறலாம் என்ற தவறான எண்ணத்தைப் பங்கேற்பாளரின் மறுபரிசீலனை உருவாக்கக் கூடாது. முன்மொழியப்பட்ட சுயவிவரமும் ஊடகப் பயன்பாடும் கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தத்தின் வரம்புக்குள் வருகிறதா என்பதைக் குழு உறுதிப்படுத்த வேண்டும்.
பங்கேற்பாளர் ஏற்கனவே உள்ள இசைவு நிபந்தனைகளிலிருந்து மாறுபட்டக் கட்டுப்பாட்டைக் கோரினால், இசைவுப் பதிவை முறையாகத் திருத்த முடியுமா என்பதைத் திட்டம் தீர்மானிக்கும் வரை வெளியீடு நிறுத்தி வைக்கப்பட வேண்டும். கட்டுப்பாடுகளும் அணுகல் முடிவுகளும் காப்பகப் பதிவிலிருந்து பிரிந்த, முறையற்ற வாய்மொழி வாக்குறுதிகளாக ஒருபோதும் இருக்கக் கூடாது.
முடிக்கப்பட்ட பொருட்களைத் திருப்பி வழங்குங்கள்
பணி நிறைவு, முன்பே ஒப்புக்கொள்ளப்பட்ட பொருட்களைப் பங்கேற்பாளருக்குத் திருப்பி வழங்குவதை உள்ளடக்க வேண்டும். திட்டமும் பங்கேற்பாளரின் விருப்பமும் பொறுத்து, இதில் பின்வருவன இருக்கலாம்:
- மறுபரிசீலிக்கப்பட்ட கலைஞர் சுயவிவரம்;
- தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்கள்;
- நேர்காணல், நிகழ்த்துதல் அல்லது செயல்விளக்கப் பதிவுகளின் நகல்கள்;
- உரைமாற்றுகள் அல்லது மொழிபெயர்ப்புகள்;
- காப்பகப் பதிவை எங்கு அணுகலாம் என்பதற்கான தகவல்;
- திருத்தங்கள் கோருவதற்கோ தவறான பயன்பாட்டைப் புகாரளிப்பதற்கோ தொடர்பு விவரங்கள் அளிக்கப்பட வேண்டும்.
பங்கேற்பாளர் நியாயமாகப் பயன்படுத்தக்கூடிய வடிவில் பொருட்களை வழங்குங்கள். பொருத்தமான சேமிப்பு வசதி, இணைய இணைப்பு அல்லது கருவிகள் இல்லாத ஒருவருக்கு மிகப்பெரிய டிஜிட்டல் கோப்புக் குறைந்த பயனையே தரும். தேவையான இடங்களில் அச்சுப் புகைப்படங்கள், சுருக்கப்பட்ட பார்வைப் பிரதிகள், நினைவக சாதனம், அல்லது ஒப்புக்கொள்ளப்பட்ட குடும்ப/சமூக நிறுவனத்தில் வைக்கப்பட்ட பொருட்கள் போன்ற மாற்றுகளை வழங்குங்கள்.
எது திருப்பி வழங்கப்பட்டது, எந்த வடிவில் வழங்கப்பட்டது, யாருக்கு வழங்கப்பட்டது, எந்தத் தேதியில் வழங்கப்பட்டது என்பதைப்பதிவு செய்யுங்கள். பொருட்களைத் திருப்பி வழங்குவது சந்திப்பிலிருந்து ஆவணப்படுத்தலுக்கான பயணத்தை நிறைவு செய்கிறது; மேலும் உருவான கலைஞரின் சுயவிவரம் அதற்குத் தேவையான அறிவைப் பகிர்ந்த நபருடன் தொடர்ந்து இணைந்திருக்கச் செய்கிறது.