1.5 இந்தக் கருவித்தொகுப்பை எவ்வாறு பயன்படுத்துவது?

இந்தக் கருவித்தொகுப்பு சமூக ஆய்வாளர்கள், மரபுத் தாங்கியவர்கள், கலைப் பயிற்சியாளர்கள், களப்பணியாளர்கள், நாட்டுப்புறவியல் ஆய்வாளர்கள், மாணவர்கள் மற்றும் நிகழ்த்துக் கலைகளை அறிந்து அவற்றை ஆவணப்படுத்த விரும்பும் பிறருக்காக உருவாக்கப்பட்டுள்ளது. காப்பகப்படுத்தல், மேல்தரவு உருவாக்கம் அல்லது தொழில்முறை ஊடகத் தயாரிப்பில் முன்பயிற்சி பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை. அறிந்துகொள்ளும் ஆர்வம், மரியாதை மற்றும் அறிவுத் தாங்கியவர்களுடன் நேரம் செலவிடத் தயாராக இருப்பது ஆகியவையே அடிப்படைத் தொடக்கப் புள்ளிகள். தொடங்குவதற்கு ஒரு குறிப்பேடும் ஒரு சாதாரண பதிவுக் கருவியும் போதுமானவை.

இந்தக் கருவித்தொகுப்பு ஒன்றோடொன்று தொடர்புடைய ஐந்து வழித்தடங்களை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது: கலைவடிவம், கலைஞர், நிகழ்த்துதல், கருவி மற்றும் இடம். பகுதிகளை வரிசையாகப் பின்பற்றலாம்; அல்லது நீங்கள் சந்திக்கும் சூழலுக்கு மிகவும் பொருத்தமான வழித்தடத்திலிருந்து தொடங்கலாம். உதாரணமாக, ஒரு கலைஞரைச் சந்திப்பதிலிருந்து, ஒரு நிகழ்த்தலைப் பார்ப்பதிலிருந்து, ஒரு கருவியை ஆராய்வதிலிருந்து அல்லது பண்பாட்டு முக்கியத்துவம் கொண்ட ஓர் இடத்துக்குச் செல்வதிலிருந்து தொடங்கலாம். ஒவ்வொரு வழித்தடமும் படிப்படியாக மற்ற வழித்தடங்களை நோக்கி உங்களை அழைத்துச் செல்லும்.

இந்தக் கருவித்தொகுப்பு மூன்று நிலைகளில் ஈடுபட வழிவகுக்கிறது.

நிலை 1: கற்றறிந்து எழுதுதல்

உரையாடல்கள், கவனித்தல் மற்றும் களக் குறிப்புகள் மூலம் தொடங்கலாம். இதன் விளைவாக ஒரு சுருக்கமான கலைஞர் சுயவிவரம், நிகழ்த்துதல் பதிவு, கலைவடிவ விளக்கம், கருவிப் பதிவு அல்லது பண்பாட்டு இடம் குறித்த பதிவு உருவாகலாம். ஒலி-ஒளிப் பதிவு சாதனங்கள் எதுவும் தேவையில்லை.

நிலை 2: அடிப்படை ஆவணப் பதிவை உருவாக்குதல்

எழுத்துப் பதிவுடன் புகைப்படங்கள், ஒலி அல்லது காணொளியையும் இணைக்கலாம்; அவற்றை கைப்பேசி, கேமரா அல்லது அடிப்படை ஒலிப்பதிவுக் கருவி மூலம் பதிவு செய்யலாம். ஒப்புதல் பெறுவது, சூழல்சார் தகவல்களைப் பதிவு செய்வது, கோப்புகளை ஒழுங்கமைப்பது மற்றும் நீங்கள் கற்றறிந்தவற்றை கட்டமைக்கப்பட்ட பதிவாகத் தயாரிப்பது ஆகியவற்றில் இந்தக் கருவித்தொகுப்பு வழிகாட்டும்.

நிலை 3: விரிவான ஆவணப்படுத்தலை மேற்கொள்ளுதல்

போதுமான நேரம், சாதனங்கள் மற்றும் பயிற்சி பெற்ற கூட்டாளர்கள் கிடைக்கும் இடங்களில் பல நேர்காணல்கள், விரிவான ஒலி-ஒளிப் பதிவுகள், எழுத்துப்பெயர்ப்பு, மொழிபெயர்ப்பு, கருவி அளவீடு, சிறப்பு புகைப்படம் அல்லது முப்பரிமாண (3D) மின்னாக்கம் ஆகியவற்றை மேற்கொள்ளலாம். இவ்வகையான விரிவான ஆவணப்படுத்தல் பின்னர் வெளியீட்டிற்கோ காப்பகத்தில் ஒப்படைப்பதற்கோ தயாரிக்கப்படலாம்.

இந்தக் கருவித்தொகுப்புடன் வழங்கப்படும் படிவங்களும் கேள்வி வழிகாட்டிகளும் உதவிக் கருவிகள் மட்டுமே; அவை கட்டாயமாகப் பின்பற்ற வேண்டிய கேள்விப் பட்டியல்கள் அல்ல. சம்பந்தப்பட்ட நபர், நடைமுறை மற்றும் சூழலுக்கு ஏற்ப அவற்றைத் தேர்ந்தெடுத்து மாற்றிப் பயன்படுத்துங்கள். எந்த நிலையிலும் உங்கள் நோக்கத்தைத் தெளிவாக விளக்குங்கள்; தொடர்ந்து ஒப்புதல் பெறுங்கள்; உருவாக்கப்பட்ட பதிவை பங்கேற்பாளர்களுடன் மீளாய்வு செய்யுங்கள்; எதைப் பாதுகாக்கலாம், எதை அணுகல் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும், எதைப் பகிரலாம் என்பதையும் இணைந்து முடிவு செய்யுங்கள். ஆவணப்படுத்தலின் தரம் விலையுயர்ந்த சாதனங்களைவிட, மனித உறவுகளையும் அறிவையும் எவ்வளவு கவனத்துடனும், பொறுப்புடனும் அணுகுகிறோம் என்பதையே அதிகமாகச் சார்ந்துள்ளது.

அடுத்தடுத்த பகுதிகள் இந்த அடிப்படைகளிலிருந்து நடைமுறைத் தயாரிப்பு, களப்பதிவு, நேர்காணல், விளக்கப் பதிவு, கோப்பு ஒழுங்கமைப்பு, பாதுகாத்தல் மற்றும் காப்பக அணுகல் ஆகியவற்றை நோக்கி நகர்கின்றன. அடிப்படை ஆவணப்படுத்தலை மேற்கொள்பவர்கள் தங்களுக்குத் தேவையான சரிபார்ப்புப் பட்டியல்கள் மற்றும் படிவங்களை மட்டும் பயன்படுத்தலாம். விரிவான ஆவணப்படுத்தலைத் திட்டமிடுபவர்கள் முழுமையான பணிச்செயல்முறையைப் பின்பற்றலாம். எந்த முறையைப் பின்பற்றினாலும், அதே நெறிமுறைக் கோட்பாடுகள் பொருந்தும்.