2.3 கலைஞரின் பயணத்தை அறிதல்

ஒரு கலைஞரின் சுயவிவரம் அவரது தனிப்பட்ட விவரங்கள், நிகழ்த்துதல்கள் மற்றும் விருதுகளின் பட்டியலைத் தாண்டியதாக இருக்க வேண்டும். அந்த நபர் கலையை எவ்வாறு சந்தித்தார், கற்றார், குறிப்பிட்டத் திறன்களை வளர்த்தார், உறவுகளை உருவாக்கினார், மாறிவரும் சமூக மற்றும் பொருளாதார சூழ்நிலைகளில் எவ்வாறு தொடர்ந்து பயிற்சி செய்தார் என்பதைக் கூற வேண்டும். இதன் நோக்கம் வீரகாவியத் தனமுள்ள வாழ்க்கை வரலாற்றை உருவாக்குவது அல்ல; குடும்பம், சமூகம் மற்றும் வரலாற்றுச் சூழலுக்குள் ஒரு கலைவாழ்க்கையைப் புரிந்துகொள்வதே ஆகும்.

கலைஞரின் சொந்தக் கூறலிலிருந்து தொடங்குங்கள்.

தயாரிக்கப்பட்ட கேள்விகளுக்குள் செல்லும் முன், பங்கேற்பாளர் தமது பயணத்தை தமக்கான முறையில் விவரிக்க அனுமதிக்கப்பட வேண்டும். பயனுள்ள தொடக்கக் கேள்வி:

“இந்தக் கலை உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக எவ்வாறு ஆனது என்பதை எங்களிடம் சொல்ல முடியுமா?”

கதை எங்கே தொடங்க வேண்டும் என்பதை பங்கேற்பாளரே தீர்மானிக்க இது இடமளிக்கிறது. சிலர் குழந்தைப் பருவ நினைவுகள், குடும்ப மூத்தவர் அல்லது முதல் நிகழ்த்தலிலிருந்து தொடங்கலாம். மற்றவர்கள் சடங்கு பொறுப்பு, வாழ்க்கையின் கடினமான ஒரு காலம் அல்லது ஆசிரியருடன் எதிர்பாராத சந்திப்பு ஆகியவற்றிலிருந்து தொடங்கலாம்.

பிறந்த இடம், தோராயமான பிறந்த ஆண்டு, குடும்பப் பின்னணி போன்ற அடிப்படைத் தகவல்கள் இந்தப் பயணத்தைச் சூழலுடன் இணைக்க உதவுகின்றன. துல்லியமான தேதிகள் எப்போதும் அறியப்பட்டிருக்க வேண்டியதில்லை; அவை எப்போதும் அவசியமுமல்ல. பங்கேற்பாளர் உறுதியாகத் தெரியாமல் இருந்தால், துல்லியமான பதிலை வற்புறுத்துவதற்குப் பதிலாக ஒரு தோராயமான ஆண்டைப் பதிவு செய்யுங்கள் அல்லது அந்த நிகழ்வை உள்ளூரில் நினைவுகூரப்படும் வேறு ஒரு நிகழ்வுடன் தொடர்புபடுத்திப் பதிவு செய்யுங்கள்.

குடும்ப மற்றும் சமூகச் சூழல்களைப் புரிந்துகொள்ளுங்கள்.

பங்கேற்பாளரின் குழந்தைப் பருவம், அவருடைய பெற்றோரின் தொழில்கள், குடும்ப உறுப்பினர்கள் கலை, விழா அல்லது சடங்கு பொறுப்புகளை வகித்தார்களா என்பதைக் கேளுங்கள். இதன் மூலம், கலை குடும்பப் பயிற்சி, சமூக நிகழ்வுகள், மத வழிபாடு, வேலை, பொது நிகழ்த்துதல் அல்லது வேறு எந்த வழி மூலம் அறிமுகமானது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

குடும்பத்தின் தாக்கத்தை தானாகவே மரபுவழிப் பரிமாற்றம் என்று விவரிக்கக் கூடாது. குடும்ப உறுப்பினர்கள் உண்மையில் என்ன செய்தார்கள், பங்கேற்பாளர் என்னக் கவனித்தார், அவருடைய கற்றலை யார் ஊக்குவித்தார்கள் அல்லது தடுத்தார்கள் என்பதைக் கேளுங்கள். பரந்த சமூகச் சூழலும் யார் கற்க முடியும், என்ன பாத்திரங்கள் கிடைக்கின்றன, எந்தச் சூழ்நிலைகளில் கலை நிகழ்த்தப்படலாம் என்பவற்றை வடிவமைத்திருக்கலாம்.

ஆசிரியர்கள், கலைமரபுகள் மற்றும் கற்றலை ஆவணப்படுத்துங்கள்

பங்கேற்பாளர் யாரிடமிருந்து கற்றார் என்பதை அடையாளம் காணுங்கள். இதில் பெற்றோர், தாத்தா-பாட்டி, மூத்த நிகழ்த்துநர்கள், குருக்கள், பக்கவாத்தியக் கலைஞர்கள், சடங்கு அதிகாரம் உடையவர்கள், சக கலைஞர்கள் அல்லது வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் சந்தித்த பல ஆசிரியர்கள் இருக்கலாம். அவர்களின் பெயர்களை இயன்றவரை துல்லியமாகப் பதிவு செய்து, ஆசிரியர்-மாணவர் உறவு எப்படி இருந்தது என்பதைக் கேளுங்கள்.

அனைத்து கற்றலும் ஒரு முறையான ஆசிரியர்-மாணவர் அமைப்பைப் பின்பற்றியது என்று கருத வேண்டாம். குடும்ப வழிப் பரிமாற்றம், குருகுல முறை, நிறுவனப் பயிற்சி, செயலில் ஈடுபட்டு கற்றல் உள்ளிட்ட பல வாய்ப்புகளை வினாப்பட்டியல் ஏற்கிறது. ஒரு கலைஞர் நிகழ்த்துதல்களைப் பார்ப்பது, கருவிகளை எடுத்துச் செல்வது, பின்னணியில் பாடுவது, மூத்தக் கலைஞர்களுக்கு பக்கவாத்தியம் செய்வது, அல்லது படிப்படியாக அதிகப் பொறுப்புள்ள பாத்திரங்களை ஏற்றுவது மூலமும் கற்றிருக்கலாம்.

பயனுள்ள கேள்விகள்:

  • உங்கள் கலைக்கான கற்றல் எவ்வாறு தொடங்கியது?
  • பங்கேற்பாளர் முதலில் என்ன கற்றார்?
  • அவர் எவ்வளவு பயிற்சி செய்தார்?
  • தவறுகள் எவ்வாறு கண்டறியப்பட்டு திருத்தப்பட்டன?
  • எந்த அறிவு வாய்மொழியாக விளக்கப்பட்டது?
  • எதைப் பார்வையிட்டு மீண்டும் மீண்டும் செய்வதன் மூலம் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது?
  • எப்போது ஆசிரியர் அவரை நிகழ்த்தத் தயாராக உள்ளவர் எனக் கருதினார்?
  • எந்த முக்கியமான பாடங்கள் அல்லது கொள்கைகள் அவருடன் தொடர்ந்து நிலைத்துள்ளன?

பங்கேற்பாளர் ஒரு கலைமரபைச் சுட்டினால், அதை அவர் பயன்படுத்தும் சொற்களிலேயே ஆவணப்படுத்துங்கள். சுயவிவரம் முழுமையாகத் தோன்ற வேண்டும் என்பதற்காக இடைவெளியற்ற ஒரு மரபுத்தொடரை உருவாக்க வேண்டாம். உறுதியின்மை, பல ஆசிரியர்கள், பாணி மாற்றங்கள் ஆகியவை எங்கு உள்ளனவோ அங்கு அவற்றைப் பதிவு செய்யுங்கள்.

பாத்திரங்களையும் கலைச் சிறப்புப் பயிற்சியையும் தடமறியுங்கள்

ஒரு கலைஞரின் தற்போதைய பாத்திரம் அவர் தொடங்கிய காலத்தின் பாத்திரமாக இருக்க வேண்டியதில்லை. இன்று முதன்மை நிகழ்த்துநராக அறியப்படும் ஒருவர் தொடக்கத்தில் பக்கவாத்தியக் கலைஞராக, துணைப் பாடகராக, உதவியாளராக, இளைய கதாபாத்திரமாக அல்லது கலைக்குழு உறுப்பினராக இருந்திருக்கலாம். இத்தகைய முந்தைய பங்களிப்புகளைப் பற்றியும், ஒரு பொறுப்பிலிருந்து மற்றொன்றுக்கு அவர் எவ்வாறு நகர்ந்தார் என்பதையும் கேளுங்கள்.

கலைஞர் சிறப்பாகப் பயிலும் கலைவடிவங்கள், பாத்திரங்கள், கருவிகள், நுட்பங்கள் அல்லது பாடல்/நிகழ்த்துதல் தொகுப்புகளை ஆவணப்படுத்துங்கள். அவர் அறிந்துள்ள பிற கலைகளையும் கேளுங்கள். சுயவிவரம் ஒரு தொழில்முறை அடையாளத்தை மட்டும் பதிவு செய்தால் மறைந்து போகக்கூடிய பாடல், நடனம், கதைசொல்லல், சடங்கு பணி, கருவி வாசித்தல், படைப்பு, ஆடைத் தயாரிப்பு மற்றும் கற்பித்தல் ஆகியவற்றுக்கிடையிலான தொடர்புகள் இதன் மூலம் வெளிப்படலாம்.

பங்கேற்பாளரின் முதல் பொது நிகழ்த்துதல் ஒரு முக்கியமான திருப்புமுனையாக இருக்கலாம். அது எங்கு நடந்தது, யார் இருந்தார்கள், அவர் என்ன பாத்திரத்தில் நிகழ்த்தினார், எவ்வாறு தயாரானார், தமக்கென்ன உணர்வு இருந்ததாக நினைவுகூருகிறார் என்பதைக் கேளுங்கள். ஒரு நிகழ்வின் முக்கியத்துவத்தை அதன் பொது புகழால் மட்டும் அல்ல, பங்கேற்பாளரே தீர்மானிக்க வேண்டும்.

கலைவாழ்க்கையின் பாதையைத் தொடர்ந்து அறியுங்கள்

பங்கேற்பாளர் நிகழ்த்திய வெவ்வேறு சூழல்களை ஆராயுங்கள்: சமூக மற்றும் கோவில் விழாக்கள், வாழ்க்கைச் சுற்றுச் சடங்குகள் அல்லது இறப்பு சார்ந்த சடங்குகள், பொது மேடைகள், பள்ளிகள், கல்லூரிகள், தொலைக்காட்சி, சுற்றுப்பயண நிகழ்ச்சிகள் அல்லது பிராந்தியத்திற்கு வெளியேயான நிகழ்வுகள். தேசிய அல்லது சர்வதேச நிகழ்த்தலை உள்ளூர் நடைமுறையைவிட இயல்பாகவே முக்கியமானதாகக் கருதாமல், அவருடைய பணியின் புவியியல் பரப்பைப் பதிவு செய்யுங்கள்.

முக்கியமான திருப்புமுனைகளை கலைஞரே அடையாளம் காணுமாறு கேளுங்கள். அவற்றில் பின்வருவன இருக்கலாம்:

  • முதல் நிகழ்த்துதல் அல்லது புதிய கலைப் பாத்திரம்;
  • முக்கியமான ஆசிரியர் அல்லது இணைபணியாளரைச் சந்தித்தல்;
  • ஒரு கலைக்குழுவில் சேருதல் அல்லது ஒன்றை நிறுவுதல்;
  • புதிய பாடல்/நிகழ்த்துதல் தொகுப்பு அல்லது கருவியை கற்றல்;
  • அங்கீகாரம் அல்லது விருது பெறுதல்;
  • நிகழ்த்துதல்களுக்காகப் பயணம் செய்தல்;
  • கற்பிக்கத் தொடங்குதல்;
  • புதிய பாடல், கதை, நுட்பம் அல்லது நிகழ்த்துதல் வடிவத்தை அறிமுகப்படுத்துதல்;
  • ஒரு இடைநிறுத்தத்திற்குப் பிறகு மீண்டும் கலையில் ஈடுபடுதல்;
  • நோய், நிதிச் சிரமம் அல்லது குறைந்து வரும் வாய்ப்புகளுக்கு எதிர்கொண்டு செயல்படுதல்.

ஒரு திருப்புமுனை இழப்பாகவும் இருக்கலாம்: ஆசிரியரின் மரணம், நிகழ்த்துதல் இடம் மறைந்து போதல், கலைக்குழு சிதைதல், அல்லது தேவையான பொருட்களும் ஆதரவளிப்பும் குறைந்து கிடைத்தல்.

வாழ்வாதாரத்தையும் ஆதரவையும் புரிந்துகொள்ளுங்கள்

இந்தக் கலை வழக்கமான, பருவகால அல்லது அவ்வப்போது கிடைக்கும் வருமானத்தை வழங்குகிறதா, பங்கேற்பாளர் வேறு வேலை செய்கிறாரா என்பதைக் கேளுங்கள். வேறு தொழில் செய்வதை அவர் “முழுநேரக் கலைஞர் அல்ல” என்பதற்கான சான்றாக விவரிக்க வேண்டாம். பல கலைமரபுகள் விவசாயம், கூலி உழைப்பு, கைவினை உற்பத்தி, வீட்டுப் பொறுப்புகள், சடங்கு சேவை அல்லது பிற வேலைகளுடன் இணைந்தே தாங்கப்படுகின்றன.

இந்தப் பயணத்தை ஆதரித்த நபர்களையும் நிறுவனங்களையும் ஆவணப்படுத்துங்கள். இதில் குடும்ப உறுப்பினர்கள், சக நிகழ்த்துநர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், ஆதரவாளர்கள், கோவில்கள், சமூக அமைப்புகள், அரசு நிறுவனங்கள் அல்லது தனியார் நிறுவனங்கள் இருக்கலாம். எந்த வகையிலான ஆதரவு வழங்கப்பட்டது, அது காலப்போக்கில் தொடர்ந்ததா என்பதைக் கேளுங்கள்.

இணைபணி மற்றும் அங்கீகாரத்தைப் பதிவு செய்யுங்கள்

கலைப் பயணங்கள் அரிதாகவே தனிநபருக்கே உரியவை. பங்கேற்பாளர் பணியாற்றிய பக்கவாத்தியக் கலைஞர்கள், இணை நிகழ்த்துநர்கள், இசைக்கலைஞர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பிற இணைபணியாளர்கள் பற்றி கேளுங்கள். அவர்களை அடையாளமற்ற பின்னணி நபர்களாக விட்டுவிடாமல், அவர்களின் பெயர்களைத் தனித்தனி கலைஞர் சுயவிவரங்களுடன் இணையுங்கள்.

விருதுகளும் பொது மரியாதைகளும் பதிவு செய்யப்பட வேண்டும்; ஆனால் அங்கீகாரம் முறையான சான்றிதழ்களுக்குள் மட்டுமே வரையறுக்கப்படக் கூடாது. சமூக நம்பிக்கை, ஒரு சடங்கை வழிநடத்தும் பொறுப்பு, மூத்த கலைஞர்களால் தேர்வு செய்யப்படுதல், கற்பிக்க அழைக்கப்படுதல், அறிவின் ஆதாரமாக அங்கீகரிக்கப்படுதல் ஆகியவையும் சமமாக முக்கியமானவையாக இருக்கலாம்.

முடிவில், அந்தக் கலை பங்கேற்பாளருக்கு என்ன அர்த்தம் கொண்டது, தமது சொந்தப் பயணத்தை அவர் எவ்வாறு புரிந்துகொள்கிறார் என்பதைக் கேளுங்கள். அவரது பதில் கலைநிறைவு, வாழ்வாதாரம், ஆன்மிகம், குடும்பப் பொறுப்பு, சமூக அடையாளம் மற்றும் சமூக அங்கீகாரம் ஆகியவற்றை ஒன்றிணைக்கலாம். மேலும், அவரது வாழ்க்கையை வரையறுக்கும் நிகழ்வுகள் எவை என்று ஆவணப்படுத்தல் குழு முடிவு செய்வதற்குப் பதிலாக, தமக்கு முக்கியமானவை எவை என்பதை கலைஞரே அடையாளம் காண இது வாய்ப்பளிக்கிறது.