2.4 உரையாடல், செயல்விளக்கம் மூலம் கற்றல்

பதிவு செய்யப்பட்ட ஒரு நிகழ்த்துதல், குறிப்பிட்ட இடத்திலும் நேரத்திலும் என்ன நடந்தது என்பதை காட்டுகிறது. ஆனால் ஒரு கலைஞர் ஏன் குறிப்பிட்ட தேர்வைச் செய்தார், ஒரு அசைவு அல்லது ஒலி எவ்வாறு உருவானது, வேறு என்ன வாய்ப்புகள் இருந்தன, எது பொருத்தமானது என்பதை கலைஞர் எவ்வாறு அறிந்து கொண்டார் என்பவற்றை அவசியமாக கேட்டறிந்து கொள்ளுங்கள். தொடர் உரையாடல் மற்றும் செயல்விளக்கங்கள் கலைஞரையும், அவர் சார்ந்த கலை அறிவையும் வெவ்வேறாக பிரதிபலிக்காமல் ஒரே சீராக நாம் அவரை அடையாளம் காண உதவும்.

முன்மொழியப்பட்ட ஆவணப்படுத்தல் பணியோட்டம், ஒரு கலைஞரையும் கலைவடிவத்துடனான அவரது உறவையும் ஆவணப்படுத்துவதற்கான நான்கு தொடர்புடைய முறைகளை வேறுபடுத்திக் காட்டுகிறது:

ஒவ்வொன்றும் வேறுபட்ட நோக்கத்தைக் கொண்டுள்ளது. நேரடி பதிவு, ஒரு கலைவடிவம் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் முழுமையாக நிகழும் விதத்தைப் பதிவுசெய்கிறது; செயல்விளக்கம், அந்த நிகழ்த்தலில் தோன்றாமல் போகக்கூடிய நுட்பங்களையும் வேறுபாடுகளையும் காட்ட முடியும்; சூழல்சார் உரையாடல் அதன் வரிசை, மாற்றங்கள் மற்றும் பண்பாட்டு தர்க்கத்தை விளக்கலாம்; வாய்மொழி வரலாறு, அந்த நடைமுறையைக் கற்றல், கலைமரபு, பரிமாற்றம் மற்றும் மாற்றம் ஆகியவற்றின் வரலாறுகளுக்குள் அமைத்துப் புரியவைக்கிறது.

வினாப்பட்டியலை கேள்வித் தொகுப்பாகப் பயன்படுத்துங்கள்.

கலைஞர் வினாப்பட்டியல் (இணைப்பு 1) தயாரிப்பை வழிநடத்த வேண்டும்; ஆனால் கட்டாயமான கேள்வி நிரலாக அதை நடத்தக் கூடாது. ஒவ்வொரு கேள்வியையும் நிலையான வரிசையில் கேட்பது பங்கேற்பாளரின் தொடர் உரையாலை தடை செய்யலாம், மீண்டும் மீண்டும் அதே பதில்களை உருவாக்கலாம், மேலும் சந்திப்பை உரையாடலாக அல்லாமல் ஒரு கருத்துக்கணிப்பாக மாற்றிவிடலாம்.

அமர்விற்கு முன், பங்கேற்பாளருக்கு தொடர்புடைய தலைப்புகளை அடையாளம் காணுங்கள். அவற்றில் பின்வருவன இருக்கலாம்:

  • கலையுடன் ஏற்பட்ட தொடக்க அனுபவங்கள்;
  • ஆசிரியர்கள் மற்றும் கற்றல் முறைகள்;
  • பயிற்சியும் திருத்தமும்;
  • நிகழ்த்துதல் பாத்திரங்களும் சிறப்புப் பயிற்சியும்;
  • முக்கியமான நிகழ்த்துதல்களும் திருப்புமுனைகளும்;
  • கற்பித்தலும் அறிவுப் பரிமாற்றமும்;
  • இணைபணிகளும் ஆதரவும்;
  • கலையில் ஏற்பட்ட மாற்றங்கள்;
  • தனிப்பட்ட சிந்தனைகளும் எதிர்காலக் கவலைகளும்.

பின்வருமாறு திறந்த அழைப்புடன் தொடங்குங்கள்:

“இந்தக் கலையை நீங்கள் எவ்வாறு கற்றீர்கள் என்பதை எங்களிடம் சொல்ல முடியுமா?”

அடுத்த கேள்வியைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் பதிலை கவனமாகக் கேளுங்கள். பங்கேற்பாளர் ஒரு ஆசிரியர், இடம், பாடல், பாத்திரம் அல்லது நிகழ்வைப் பற்றி சொன்னால், உடனடியாக வினாப்பட்டியலுக்குத் திரும்பாமல் அந்தக் கூறலைத் தொடர்ந்து செல்லுங்கள். ஏற்கனவே பதிலளிக்கப்பட்ட கேள்விகளை மீண்டும் கேட்கத் தேவையில்லை. தொடர்பில்லாத அல்லது பங்கேற்பாளருக்கு அசௌகரியமான கேள்விகளைத் தவிர்க்கலாம்.

இல்லையெனில் கவனிக்காமல் போகக்கூடிய பகுதிகளை நினைவூட்டுவதற்கான கருவியாகவே வினாப்பட்டியல் மிகப் பயனுள்ளதாகும். அது நேர்காணல் செய்பவரை இன்னும் கவனமாகக் கேட்க உதவ வேண்டும்; உரையாடலின் திசையை பங்கேற்பாளர் தீர்மானிப்பதைத் தடுக்கக் கூடாது.

கூறல்கள், எடுத்துக்காட்டுகள் மற்றும் நினைவுகளைக் கேளுங்கள்.

“நீங்கள் எப்போது தொடங்கினீர்கள்?” போன்ற கேள்விகள் ஒரு தேதியைத் தரலாம்; ஆனால் வாழ்க்கை வரலாற்று உரையாடல் அதைக் கடந்து செல்ல வேண்டும். பங்கேற்பாளர் பார்த்தது, கேட்டது, செய்தது குறித்து என்ன நினைவில் வைத்திருக்கிறார் என்பதைக் கேளுங்கள். அப்போது இருந்தவர்கள் யார், சூழல் எப்படி இருந்தது, அவரது முதல் பொறுப்புகள் என்ன, ஆசிரியர் அவரை எவ்வாறு திருத்தினார், தன்னிச்சையாக நிகழ்த்த முடியும் என்ற உணர்வு எப்போது ஏற்பட்டது என்பவற்றை விவரிக்க அனுமதியுங்கள்.

“உங்கள் ஆசிரியர் யார்?” என்று மட்டும் கேட்பதற்குப் பதிலாக, பின்வரும் கேள்விகளையும் தொடருங்கள்:

  • ஆசிரியர் முதலில் என்ன செய்யச் சொன்னார்?
  • நீங்கள் தவறு செய்ததை எவ்வாறு அறிந்தீர்கள்?
  • ஆசிரியர் திருத்தத்தை வார்த்தைகளில் விளக்கினாரா, அல்லது செய்து காட்டினாரா?
  • அனைவருக்கும் ஒரே முறையில்தான் கற்றுக்கொடுக்கப்பட்டதா?
  • எதை கற்றுக்கொள்வது கடினமாக இருந்தது?
  • பல ஆண்டுகள் பயிற்சி செய்த பிறகே நீங்கள் புரிந்துகொண்ட ஏதாவது உள்ளதா?

நினைவு எப்போதும் தெளிவான காலவரிசையைப் பின்பற்றாது. பங்கேற்பாளர்கள் குழந்தைப் பருவம், சமீபத்திய நிகழ்வுகள், மூத்தோரிடம் கேட்ட கதைகள் ஆகியவற்றுக்கு இடையே நகரலாம். இந்த நகர்வை அனுமதியுங்கள். தோராயமான தேதிகள், நினைவில் உள்ள நிகழ்வுவரிசைகள், வேறுபட்ட பதிப்புகள் ஆகியவற்றை பங்கேற்பாளர் எவ்வாறு கூறுகிறாரோ அவ்வாறே பதிவு செய்யுங்கள்.

கவனிப்பின் மூலம் கற்றுக்கொள்ளுங்கள்

அனைத்து அறிவும் வார்த்தைகளில் வெளிப்படாது. பங்கேற்பாளர் பேசும்போதோ நிகழ்த்தும்போதோ, உடல், குரல், கருவி, பொருட்கள் மற்றும் சுற்றியுள்ள இடம் எவ்வாறு ஒன்றோடொன்று செயல்படுகின்றன என்பதை கவனியுங்கள். கலைவடிவத்தைப் பொறுத்து, இதில் பின்வருவன இருக்கலாம்:

  • உடல் நிலை, சமநிலை மற்றும் அசைவின் திசை;
  • மூச்சுப்பயன்பாடு, குரல் அமைவு மற்றும் தொனியில் ஏற்படும் மாற்றங்கள்;
  • கைகளின் நிலை, பிடிப்புகள், அடிகள் அல்லது விரல் வடிவங்கள்;
  • தாளம், மீளுருவாக்கம் மற்றும் ஒருங்கிணைப்பு;
  • முதன்மை மற்றும் துணை நிகழ்த்துநர்களுக்கிடையிலான தொடர்பு;
  • ஆடைகள், கருவிகள் அல்லது சடங்கு பொருட்கள் கையாளப்படும் முறை;
  • ஒரு தொடரைத் தொடங்க, மாற்ற அல்லது முடிக்கப் பயன்படுத்தப்படும் சைகைகள்;
  • நிகழ்த்துநரும் பார்வையாளர்களும் அல்லது சடங்கு பங்கேற்பாளர்களும் கொண்ட உறவு.

கவனிப்பு மட்டுமே போதிய தரவாக இருக்காது. குழு மீண்டும் மீண்டும் நிகழும் ஒரு சைகை, ஓர் இடைநிறுத்தம், குரல் அல்லது தொடர்பில் மாற்றம் போன்றவற்றைக் கவனித்தால், அதற்கு என்ன அர்த்தம் என்று கலைஞரிடம் கேளுங்கள். தோற்றத்தை மட்டும் வைத்து குறியீட்டு அல்லது சடங்கு அர்த்தத்தை பதிவு செய்து விட வேண்டாம்.

பயனுள்ள ஒரு கேள்வி:

“இந்த இடத்தில் நீங்கள் உங்கள் நிலையை மாற்றியதை நாங்கள் கவனித்தோம். அப்போது என்ன நடந்துகொண்டிருந்தது என்பதை விளக்க முடியுமா?”

அந்தச் செயல் அர்த்தமுள்ளதாக இருந்தது என்று பங்கேற்பாளர் உறுதிப்படுத்தலாம்; அது ஒரு நடைமுறைச் சீரமைப்பு மட்டுமே என்று விளக்கலாம்; அல்லது அதற்கு நிரந்தரமான குறிப்பிட்ட அர்த்தமில்லை என்றும் சொல்லலாம். இந்த மூன்று பதில்களும் செல்லுபடியாகும்.

செய்முறை செயல்விளக்கத்துக்கு அழையுங்கள்

சில செய்முறைகளை கலைஞர் செய்து காட்டும்போது எளிதாக விளங்குகின்றன. ஒரு செயல்விளக்கம் அசைவு, குரல் நுட்பம், தாள வடிவம், கதாபாத்திரம், சைகை, கருவி அடி, நிகழ்வுத் தொடர், ஆடையின் ஒரு கூறு, அல்லது நிகழ்த்தலுக்குத் தயாராகும் முறையை மையப்படுத்தலாம்.

எதைச் செய்து காட்டுவது பயனுள்ளதாக இருக்கும் என்று பங்கேற்பாளரிடமே கேளுங்கள். எந்த நுட்பம் முக்கியம் என்பதை ஆவணப்படுத்தல் குழு ஏற்கனவே அறிவதாகக் கருத வேண்டாம். பொருத்தமான இடங்களில், கலைஞரை பின்வருமாறு செய்ய அழைக்கலாம்:

  1. நுட்பம் அல்லது தொடரின் பெயரைச் சொல்லுதல்;
  2. அதை இயல்பான நிகழ்த்துதல் வேகத்தில் செய்து காட்டுதல்;
  3. அதை மெதுவாக மீண்டும் செய்து காட்டுதல்; தேவைப்படும் நேரத்தில் விளக்கங்களைக் கேட்டறிதல்.
  4. அதன் கூறுகளான அசைவுகள், ஒலிகள் அல்லது பலதரப்பட்ட கட்டங்களை அடையாளம் காட்டுதல்;
  5. பொதுவாக ஏற்படும் தவறுகளை விளக்குதல்;
  6. சாத்தியமான வேறுபாடுகளை செய்து காட்டுதல்;
  7. அது எப்போது, எங்கு பயன்படுத்தப்படுகிறது என்பதை விவரித்தல்;
  8. அதை யார் கற்கலாம் அல்லது நிகழ்த்தலாம் என்பதை விளக்குதல்.

முன்மொழியப்பட்ட பணியோட்டம், செயல்விளக்கங்கள் கலைப் பயிற்சியாளர் வழிநடத்துபவையாகவும் பண்பாட்டு முறையில் பொருத்தமானவையாகவும் இருக்க வேண்டும் எனக் குறிப்பிடுகிறது. சில நடைமுறைகளை அவற்றின் சடங்கு சூழலிலிருந்து பிரிக்க முடியாது; கேட்டவுடன் மீண்டும் செய்யவும் முடியாது; பிற பங்கேற்பாளர்கள் இல்லாமல் நிகழ்த்தவும் முடியாது. மற்ற சில நடைமுறைகள் வயது, பாலினம், சமூக உறுப்பினர் நிலை, பருவம் அல்லது சடங்கு அதிகாரம் ஆகியவற்றால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கலாம். ஏதாவது ஒன்றைச் செய்து காட்டக் கூடாது என்று பங்கேற்பாளர் சொன்னால், அந்த இயலாமையை மதித்து ஒரு கட்டுப்பாடாக ஆவணப்படுத்த வேண்டும்; “உள்ளடக்கம் காணவில்லை” என்று கருதக் கூடாது.

தெளிவான பதிவு கிடைக்க வேண்டும் என்பதற்காக மட்டும் உடல்ரீதியாக கடினமான, ஆபத்தான அல்லது நிகழ்த்து முறைக்கு ஒவ்வாத செயலை மீண்டும் செய்ய யாரிடமும் கேட்கக் கூடாது.

உடலோடு இணங்கிய அறிவை கவனியுங்கள்

சிலவற்றை எவ்வாறு நிகழ்த்துவது என்பதை கலைஞர்கள் அறிந்திருக்கலாம்; ஆனால் அதை வழக்கமாக வார்த்தைகளில் விளக்காமல் இருக்கலாம். ஒரு பாடகர் சரியான குரல் தரத்தை கேட்டு உணரலாம். ஒரு நடனக் கலைஞர் பொருத்தமான சமநிலையை உடலால் உணரலாம். ஒரு தாளக் கலைஞர் தொடுதலின் மூலம் இறுக்கத்தையோ வலிமையையோ சரிசெய்யலாம். ஒருபோதும் முறையாகப் பெயரிடப்படாத சைகைகளின் மூலம் ஒரு கலைக்குழு ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு நகரலாம்.

ஒரு அறிவை உடனடியாக வார்த்தை வடிவிலான விதியாக மாற்ற முடியாததால் அது முழுமையற்றது என்று கருத வேண்டாம். செய்து காட்டுதல், மீண்டும் செய்தல், ஒப்பிடுதல் மற்றும் கவனித்தல் ஆகியவை அதை ஆவணப்படுத்துவதற்கு ஏற்ற முறைகளாக இருக்கலாம். பங்கேற்பாளர் ஒலி, சைகை அல்லது அசைவின் மூலம் விளக்கும்போது, எழுதப்பட்டவற்றை மட்டும் நம்புவதற்குப் பதிலாக, ஒலி-ஒளிப் பதிவு அந்த விளக்கத்தை முழுமையாகப் பாதுகாக்க வேண்டும்.

விளக்கம், புதுமை மற்றும் மாற்றத்தை ஆராயுங்கள்.

கலைஞர்கள் முதலில் கற்ற காலத்தின் கலைவடிவத்தையும் அதன் இன்றைய வடிவத்தையும் ஒப்பிடுமாறு வினாப்பட்டி கேட்கிறது. ஆடை, பாடல்கள், பார்வையாளர்கள், ஒலி பெருக்கம், வெளிச்சம், மேடை அமைப்பு ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றங்களையும், கலைஞர் அறிமுகப்படுத்திய புதுமைகளையும் விவாதிக்க அது தூண்டுகிறது.

குறிப்பிட்ட ஒப்பீடுகளைக் கேளுங்கள்:

  • நீங்கள் தொடங்கிய காலத்தில் இது எவ்வாறு நிகழ்த்தப்பட்டது?
  • அதே பகுதியில் இப்போது நீங்கள் எவ்வாறு நீங்கள் சார்ந்த கலையை நிகழ்த்துவீர்கள்?
  • வேறு நிகழ்வுகளுக்குப் பயன்படுத்தப்படும் வேறுபட்ட கலையின் வடிவங்கள் உள்ளனவா?
  • புதிய பாடல்கள், கதைகள் அல்லது நிகழ்த்துதல் முறைகளை நீங்கள் அறிமுகப்படுத்தினீர்களா?
  • சக கலைஞர்கள் அல்லது பார்வையாளர்கள் எவ்வாறு பதிலளித்தார்கள்?
  • கலையின் வலிமையைக் குறைக்காமல் எவை மாறலாம்?
  • எவை மாற்றப்படக் கூடாது? ஏன்?

மாற்றத்தை தானாகவே வீழ்ச்சி அல்லது முன்னேற்றம் என்று விவரிக்கக் கூடாது. கலைஞர் அதை எவ்வாறு விளக்குகிறார் என்பதைப் பதிவு செய்யுங்கள். புதிய மைக்ரோஃபோன் ஒரு நிகழ்த்தலை பெரிய பார்வையாளர் கூட்டத்துக்குக் கேட்கச் செய்யலாம்; அதே நேரத்தில் குரல் நுட்பத்தை மாற்றியமைக்கலாம். நேரம் சுருக்கப்பட்ட நிகழ்த்துதல் புதிய வாய்ப்புகளை உருவாக்கலாம்; அதே நேரத்தில் முக்கியமான பகுதிகளை நீக்கிவிடலாம். ஒரே மாற்றத்தை வெவ்வேறு கலைஞர்கள் வெவ்வேறு விதமாக மதிப்பிடலாம்.

கருத்துக்களும், எதார்த்த விடைகளும் வேறுபடும் இடங்களில், அவற்றை ஒருமித்த கருத்தாக இணைக்காமல் வேறுபாட்டையே பாதுகாத்துப் பதிவு செய்யுங்கள். ஒரு கலைஞரின் விளக்கம் அந்த நபரின் அறிவையும் அனுபவத்தையும் பிரதிபலிக்கிறது; அது தானாகவே ஒவ்வொரு கலைப் பயிற்சியாளரையும் அல்லது முழு சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தாது என்பதை அறிந்து பதிவுசெய்க.

அமர்வை முடித்து அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானியுங்கள்.

அமர்வு முடிவில், கேள்விகள் தொடாத ஏதாவது விஷயத்தை பங்கேற்பாளர் சேர்க்க விரும்புகிறாரா என்று கேளுங்கள். குறிப்பிடப்பட்ட நபர்கள், இடங்கள், கலைவடிவங்கள் மற்றும் தொழில்நுட்பச் சொற்களின் பெயர்களை உறுதிப்படுத்துங்கள். வேறு ஒருவரை அணுக வேண்டுமா, அல்லது மேலும் ஒரு செயல்விளக்கம் குறிப்பிட்ட விஷயத்தைத் தெளிவுபடுத்துமா என்பதையும் கேளுங்கள்.

உரையாடலும் செயல்விளக்கமும் ஒரே அமர்வில் சாத்தியமான எல்லா தகவல்களையும் எடுத்து விடுவதற்காக அல்ல. நிகழ்த்துதல், விளக்கம், நினைவு மற்றும் உடல்ரீதியிலான நடைமுறை ஆகியவை அவற்றைப் பகிர்ந்த கலைஞருடன் இணைந்தே இருக்கும் வகையில் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு பதிவை உருவாக்குவதே நோக்கம்.