4.1 நிகழ்த்துதல் நிகழ்வை அடையாளம் கண்டு சூழலில் அமைத்தல்

ஒரு நிகழ்த்துதல் என்பது ஒரு கலை வடிவத்தின் குறிப்பிட்ட ஒரு நிகழ்வு ஆக்கமாகும். அது ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சிக்காக, இடம், நேரம், நபர்கள் (கலைஞர்களின்) பங்கேற்பு, ஆகியவற்றினை மூலப்பொருட்களால் கட்டமைக்கப்பட்டு நடைபெறுவதாகும். எனவே, அதே கலைவடிவம் ஒரு நிகழ்வில் இருந்து மற்றொரு நிகழ்விற்கு வேறுபட்ட முறையில் நிகழ்த்தப்படலாம். சுவடுகள் கூறு கட்டமைப்பில் (entity framework), ‘நிகழ்த்துதல்’ என்பது ஒரு கலைவடிவம் நிகழ்த்துதப்படும் குறிப்பிட்ட, காலவரையறுக்கப்பட்ட நிகழ்வாக வரையறுக்கப்படுகிறது: அதாவது, கலைவடிவத்தின் வரையறை அல்ல; அதன் நடைமுறையின் ஒரு குறிப்பிட்ட நிகழ்வாக்கம்.

இந்தப் பகுதியின் மையக் கேள்வி: ஒரு கலை வடிவத்தின் குறிப்பிட்ட ஒரு நிகழ்வாக்கத்தை, அதன் சூழலில் அமைந்த நிகழ்வாக நாம் எவ்வாறு புரிந்துகொண்டு, ஆவணப்படுத்தி, விவரிப்பது? நம் முன் தோன்றுவதைக் கேமராவில் பதிவு செய்வது மட்டும் இதற்குப் போதாது. என்ன நிகழ்வு நடைபெறுகிறது? அது இப்போது ஏன் நடைபெறுகிறது? அதை சாத்தியமாக்குபவர்கள் யார்? தொடக்கம் முதல் முடிவு வரை என்ன நடக்கிறது? எந்தப் பொருட்களும் (கருவிகள்) இடங்களும் இதில் ஈடுபடுகின்றன? பங்கேற்பையும் பதிவையும் எந்த நெறிகள் வழிநடத்துகின்றன? மேலும் இந்த குறிப்பிட்ட நிகழ்வின் தனிச்சிறப்பு என்ன? என்பவற்றைக் களப்பணியாளர் கற்றறிய வேண்டும்.

பதிவிலிருந்து அல்ல, நிகழ்விலிருந்து தொடங்குங்கள்

இந்தக் குறிப்பிட்ட நிகழ்வு அல்லது சந்தர்ப்பத்தின் உள்ளூர் பெயரை முதலில் கேளுங்கள். ஒரு நிகழ்த்துதல் மீண்டும் மீண்டும் நடைபெறும் திருவிழா, நேர்த்திக்கடன், இறப்பு அல்லது வாழ்க்கைச் சுழற்சி சடங்கு, ஊர்வலம், பருவகால நிகழ்வு, பொது மேடை நிகழ்ச்சி, கற்பித்தல் அமர்வு, அல்லது ஆவணப்படுத்தலுக்காகவே ஏற்பாடு செய்யப்பட்ட பதிவு ஆகியவற்றின் ஒரு பகுதியாகவோ இருக்கலாம். இச்சூழல்கள் ஒன்றுக்கொன்று மாற்றாகக் கருதப்பட முடியாது. ஆகவே, முன்மொழியப்பட்ட நேர்காணல் அட்டவணை, நிகழ்வின் துல்லியமான பெயர் என்ன? அது மீண்டும் நடைபெறும் நிகழ்வா? அல்லது ஒருமுறை நிகழ்வா? எந்தச் சிறப்பு சூழல் மக்களை ஒன்று கூட்டியுள்ளது? அதன் நேரம் பருவம், சடங்கு, நாள்காட்டி அல்லது உள்ளூரில் அங்கீகரிக்கப்பட்ட வேறு நிபந்தனைகளின் அடிப்படையிலா என்பதை முதலில் கேட்கிறது.

ஒரு பதாகை அல்லது அழைப்பிதழில் அச்சிடப்பட்டுள்ள தலைப்பே பங்கேற்பாளர்கள் அந்த நிகழ்வைப் புரிந்துகொள்ளும் பெயர் என்று கருத வேண்டாம். ஒரு திருவிழாவில் பல நிகழ்த்துதல்கள் இடம்பெறலாம். ஒரு கலைக்குழு ஒரு மேடை நிகழ்ச்சியில், ஒன்றுக்கு மேற்பட்ட கலை வடிவங்களையும் நிகழ்த்தலாம். ஒரு நீண்ட சடங்கின் உட்பகுதியாக ஒரு நிகழ்த்துதல் தொடர் இருக்கலாம். தேவையான இடத்தில் பொதுத் தலைப்பு அல்லது நிகழ்ச்சி நிரல் தலைப்பைப் பதிவு செய்யுங்கள்; அதே நேரத்தில், நீங்கள் ஆவணப்படுத்தும் குறிப்பிட்ட நிகழ்வை பங்கேற்பாளர்கள் என்னவென்று அழைக்கிறார்கள், அது பெரிய நிகழ்ச்சியுடன் எவ்வாறு தொடர்புபடுகிறது என்பதையும் கேளுங்கள்.

இந்த ‘நிகழ்த்துதல்’ எதைக் குறிக்கிறது என்பதைத் தீர்மானியுங்கள்

ஒரு நிகழ்த்துதலின் எல்லை எப்போதும் தெளிவாக இருப்பதில்லை. ஒரு ஊர்வலம் ஒரு இடத்தில் தொடங்கி, பல இடங்களில் நின்று, வேறு ஒரு இடத்தில் முடிவடையலாம். ஒரு திருவிழா பல நாட்கள் தொடரலாம்; ஆனால் அதற்குள் ஒரு குறிப்பிட்ட நிகழ்த்துதல் ஒரு மணி நேரமே நீடிக்கலாம். தெளிவாகக் காணக்கூடிய முதல் கலைச் செயலுக்கு முன்பே தயாரிப்பு அல்லது தொடக்க அழைப்புடன் ஒரு சடங்கு நிகழ்த்துதல் தொடங்கியிருக்கலாம்; பொருட்கள் மீண்டும் வைக்கப்பட்ட பிறகோ, நிறைவு செயல் முடிந்த பிறகோ, பங்கேற்பாளர்கள் கலைந்துசென்ற பிறகோ தான் அது முடிவடையலாம். ஆவணப்படுத்தலுக்காக பதிவு செய்யப்படும் செயல்விளக்கத்திற்கு தெளிவான தொடக்கமும் முடிவும் இருக்கலாம்; இருப்பினும், அது இயல்பாக நடைபெறும் சமூக நிகழ்வாகக் காட்டப்படாமல், செயல்விளக்கம் எனத் தெளிவாக அடையாளப்படுத்தப்பட வேண்டும்.

நிகழ்வில் ஈடுபட்டவர்களிடம் அவர்கள் எதைத் தொடக்கமாகவும் முடிவாகவும் கருதுகிறார்கள் என்று கேளுங்கள். ஒரு பெரிய நிகழ்வில் பல கலைவடிவங்கள் இடம்பெற்றால், பொதுவான திருவிழா அல்லது நிகழ்ச்சியுடன் அவற்றின் தொடர்பைத் தக்கவைத்தபடி, அவற்றுக்குத் தனித்தனி நிகழ்த்துதல் பதிவுகள் தேவைப்படுகிறதா என்பதைத் தீர்மானியுங்கள். நகர்ந்து செல்லும் ஒரு நிகழ்வை பங்கேற்பாளர்கள் ஒரே தொடர்ச்சியான நிகழ்த்தலாகப் புரிந்துகொண்டால், கேமராவின் நிலை மாறியதற்காக மட்டும் அதை பல தனி நிகழ்வுகளாகப் பிரிக்க வேண்டாம். ஆவணப்படுத்தல் குழு, நிகழ்வின் பண்பாட்டு மற்றும் நடைமுறைத் தர்க்கத்தை முடிந்தவரை நெருக்கமாகப் பின்பற்ற வேண்டும்.

இந்த நிகழ்வு ஏன் இப்போது நடைபெறுகிறது என்பதை அறியுங்கள்

ஒரு நிகழ்வு நடத்தப்படுவதற்கு ஒரு காரணம் அல்லது நோக்கம் இருக்கும். அதை யார் அழைத்தார், கோரினார், ஏற்பாடு செய்தார், அல்லது அது நடைபெறுவதை உறுதி செய்யும் பொறுப்பு யாரிடம் உள்ளது என்று கேளுங்கள். ஒரு சூழலில் நிகழ்த்துவது ஒரு சடங்குக் கடமையை நிறைவேற்றலாம்; மற்றொரு சூழலில் அது திருமணம், நினைவேந்தல் அல்லது திருவிழா போன்ற நிகழ்வுகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம்; வேறு சில சூழல்களில் பள்ளி, பண்பாட்டு அமைப்பு அல்லது அரசு திட்டம் அதை நடத்தியிருக்கலாம். இச்சூழ்நிலைகள் நிகழ்த்துதலின் கால அளவு, நிகழ்த்துதல் தொகுப்பு, பார்வையாளர்கள், மேடை அமைப்பு மற்றும் கலைஞர்களுக்குக் கிடைக்கும் சுதந்திரத்தின் அளவு ஆகியவற்றை பாதிக்கலாம்.

‘நிகழ்ச்சி வகை’ என்பதை ஒரு கீழ்தோன்றும் பட்டியலின் ஒரு தேர்வாக மட்டும் சுருக்கிவிட வேண்டாம். விவரிப்பதற்கு தேவையான வகையைப் பதிவு செய்யுங்கள் — திருவிழா, சடங்கு, இறப்பு நிகழ்வு, ஊர்வலம், மேடை நிகழ்ச்சி, செயல்விளக்கம் அல்லது பதிவு அமர்வு — ஆனால் அந்த வகை இந்தக் குறிப்பிட்ட நிகழ்வில் என்ன பொருள் தருகிறது என்பதையும் அறியுங்கள். மக்கள் ஏன் கூடினர், இந்த நிகழ்ச்சியை யார் அங்கீகரிக்கிறார்கள், நிகழ்த்தப்படும் கலைவடிவத்துடன் இதற்கு என்ன உறவு உள்ளது என்பதைக் குறுகிய நிகழ்வு குறிப்பு தெளிவுபடுத்த வேண்டும். நிகழ்த்துதலின் விவரிப்பு கட்டமைப்பு, நிகழ்வின் அடையாளம், தேதி, நிகழ்ச்சி மற்றும் கலைவடிவத்துடனான உறவு ஆகியவற்றை பதிவின் அடிப்படை கூறுகளாகக் கருதுகிறது. 1

அடுத்த கட்டத்திற்குச் செல்லும் முன், களப்பணியாளர் பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கக்கூடியவராக இருக்க வேண்டும்: இந்த நிகழ்வு என்னவென்று அழைக்கப்படுகிறது? இது ஏன் நடைபெறுகிறது? எப்போது, எங்கே தொடங்கி முடிகிறது? இது ஒரு பெரிய நிகழ்ச்சியின் பகுதியாக உள்ளதா? எந்தக் கலைவடிவம் நிகழ்த்தப்படுகிறது? இப்போது என்ன நடக்கப் போகிறது என்பதை விளக்குவதற்கு மிகவும் பொருத்தமானவர் யார்? இப்பதில்கள், நிகழ்வை வெறும் படம் பிடிக்க வேண்டிய ஒன்றாக அல்லாமல், தொடர்ச்சியாகப் பின்பற்றிப் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றாக நிலைநிறுத்துகின்றன.